தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் உபின் தீவு மேம்பாடுகள்

2 mins read
9469890f-b811-47a9-aaca-2b42a3222fb2
‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களை முன்னிட்டு கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட மரங்கள் சனிக்கிழமை (ஜூன் 28) நடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உபின் தீவின் இயற்கை, பண்பாட்டு வளங்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் உபின் திட்டத்தின் அடுத்த கட்ட முயற்சிகள் ஜூன் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு உபின் தீவில் அனுசரிக்கப்படும் உபின் தினத்தில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உபின் தீவுக்கான வருங்காலத் திட்டங்களைப் பகிர்ந்தார்.

2014ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ‘உபின் நண்பர்கள் குழு’ முன்முயற்சியைத் தலைவராக வழிநடத்தி வந்த திரு லீ, உபின் தீவு மேம்பாட்டுக்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பற்றி எடுத்துரைத்தார்.

“நகர்ப்புறத்திலிருந்து வரும் மக்கள் தொடர்ந்து உபின் தீவின் இயற்கை வளங்களைக் கண்டு ரசித்து, அனுபவிக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன,” என்றும் கூறினார் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு லீ.

அதுமட்டுமின்றி ‘உபின் நண்பர்கள் குழு’ முன்முயற்சியின் புதிய தலைவராக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

“நமது பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்குகையில் நாம் அடைந்த முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்,” என்று திரு டானுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் திரு லீ.

பல்வேறு உயிரினங்களுக்கு உறைவிடமாக உபின் தொடர்கிறது.

பத்தாண்டுகளாக இயங்கி வரும் உபின் திட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மேம்பாட்டு முயற்சிகள் நிறைவடைந்தன.

அந்த வகையில் சிங்கப்பூர் சிவப்புத் தரவு புத்தகம் ‘முக்கிய பாதுகாப்பு தேவை’ என குறிப்பிடப்பட்டுள்ள ‘சின்னமன் புஷ்’ தவளை வகை (Cinnamon Bush Frog) தீவுக்குள் அறிமுகம் கண்டுள்ளது.

இந்த தவளைகள் வெற்றிகரமாக உபின் தீவில் தொடர்ந்து உயிர் வாழ்ந்தால் சிங்கப்பூருக்கும் கொண்டு செல்லப்படலாம்.

மேலும், ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களை முன்னிட்டு கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட மரங்கள் சனிக்கிழமை (ஜூன் 28) நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கம்போங் வீடுகளின் மறுசீரமைப்பு

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கம்போங் வீட்டு மறுசீரமைப்புத் திட்டத்தை தொடரும் முயற்சியில் முதற்கட்டமாக ஐந்து கம்போங் வீடுகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இவை சமூக நிகழ்வுகள் மற்றும் வணிகத்துக்காகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்புப் பணிகளை ‘உபின் நண்பர்கள் குழு’ மேற்பார்வையிடும்.

விரிவாக்கம் காணும் கல்வி வாய்ப்புகள்

கடந்த ஆண்டு உபின் பள்ளி திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. அதன்கீழ் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உபின் வாசிகளின் அன்றாட நடைமுறைகள் கற்றுக்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வாண்டு உபின் பள்ளித் திட்டம் ஏங்கர் கிரீன் தொடக்கப்பள்ளி, ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி போன்ற மேலும் சில பள்ளிகளுக்கு நீட்டிக்கப்படும். தொடரும் மற்ற வாழ்விட மேம்பாட்டு முயற்சிகளையும் இந்த விரிவான பள்ளித் திட்டம் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்