இளையரின் ‘உச்சம்’

2 mins read
294305c4-743d-4785-816f-99d1bb5fcf8b
உச்சம் 2024 பாடல் போட்டியில் பங்கேற்ற இளையர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
multi-img1 of 2

‘இளையர்களால் இளையர்களுக்காக’ எனும் கருப்பொருளில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘உச்சம் 2024’ திறன் போட்டிகள் செப்டம்பர் 1ஆம் தேதி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றன. தனிநபர்களாகவும் குழுக்களாகவும் பங்கேற்று இளையர்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், ஆடல், பாடல், குறும்படத் தயாரிப்பு என மூன்று வகைப் போட்டிகள் நடைபெற்றன. 16 குழுக்கள் பாட்டுப் போட்டிக்கும் நடன, குறும்படப் போட்டிகளுக்குத் தலா எட்டுக் குழுக்களும் பதிவு செய்திருந்தன.

முதற்சுற்றில் பாட்டு, நடனப் போட்டிகளுக்குத் தலா ஆறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை இறுதிப்போட்டியில் மோதின. முதற்கட்டப் போட்டியில் வென்ற மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இப்போட்டிகளுக்கு தவநேசன், மதியழகன், சுதாஷினி, விக்னேஸ்வரி வடிவழகன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். முதல் மூன்று இடங்களை வென்றோர்க்கு முறையே $500, $300, $200 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

“ஏற்பாட்டுக்குழு துணைத் தலைவர் ராயன் மார்க்ஸ் உட்பட, ஏறத்தாழ 35 பேர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளோம். பேரளவாக இருந்த இளையர்களின் ஆர்வமும் பார்வையாளர்களின் ஆதரவும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது”, என்றார் ஏற்பாட்டுக்குழு தலைவர் மாணவர் மாறன் அன்பழகன்.

“350க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பது மனநிறைவாக இருக்கிறது,” என்றார் மன்றத்தின் துணைத் தலைவருமான மாறன்.

“சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் புதிய செயற்குழு அமைந்தபின் நடைபெற்ற முதல் பெரிய நிகழ்ச்சி இது. தரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு செயல்பட்டோம். ஒவ்வொரு குழுவும் தனித்திறமையுடன் மிளிர்ந்ததும் பார்வையாளர்கள் அதனை உற்சாகத்துடன் ரசித்ததும் மிக்க மகிழ்ச்சியளித்தது,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத் தலைவரான மாணவி பிரேம் ஆனந்த் லாவண்யா.

மேலும், தாமே எழுதி, இசையமைத்து, பாடுவது, தாங்களே நடனம் அமைத்துக் குழுவாக மேடையில் ஆடுவது, இசைக்கருவி வாசித்துக்கொண்டே பாடுவது எனப் பல்திறன் கொண்ட இளையர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அளவற்ற திறமை கொண்ட சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களுக்குத் தளம் அமைத்துக்கொடுக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பெருமையளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

உச்சம் 2024 நடனப் போட்டியில் பங்கேற்ற இளையர்கள்.
உச்சம் 2024 நடனப் போட்டியில் பங்கேற்ற இளையர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த இளையர்கள்.
நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த இளையர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
குறிப்புச் சொற்கள்