உலகின் ஆகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ சிங்கப்பூர் வந்துள்ளது.
பிரிட்டிஷ் விமானந்தாங்கிக் கப்பலான அது மரினா பே பயணப் படகு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அந்தக் கப்பலில் விமானங்கள் வந்திறங்கி ஏறுவதற்கான பகுதி மிகவும் பெரியது. ஏறத்தாழ மூன்று காற்பந்துத் திடல் அளவுக்கு அது பரந்து விரிந்து உள்ளது.
பல நாடுகளின் கப்பல்களை உள்ளடக்கிய குழுவின் தலைமையிடம் என்ற முறையில் இந்த வட்டாரத்திற்கு முதல்முறையாக வந்துள்ளது அந்தக் கப்பல்.
சிங்கப்பூரில் நிலைகொண்டு இருக்கும் வேளையில் பொதுமக்கள் அதனை நேரில் கண்டு வியக்கலாம். இருப்பினும், அதனை யார் பார்வையிடலாம் என்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
கப்பலை எந்தவிதக் கட்டணமும் இன்றி நேரில் சென்று காண்போரைத் தேர்ந்து எடுக்க இவ்வாண்டின் முற்பகுதியில் குலுக்கு நடத்தப்பட்டது.
அதில் தேர்ந்து எடுக்கப்பட்ட 600 பேர் மட்டுமே பிரிட்டிஷ் போர்க் கப்பலையும் கப்பலில் நடக்க இருக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் காண முடியும்.
தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறை தினமும் அந்த நிகழ்வுகளில் அடங்கும். பிரிட்டனின் 30 வர்த்தகங்கள் பங்கேற்கும் கண்காட்சி ஒன்றும் அந்தக் கப்பலில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அறிவியல், தொழில்நுட்பக் கருத்தரங்கு ஒன்றும் அதில் நடத்தப்படும். சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் நிபுணர்கள் அதில் கலந்துகொண்டு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வர்.
தற்காப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான குழு விவாதம் ஒன்றும் கப்பலில் அரங்கேறும். மேலும், இருநாட்டு ராணுவ வீரர்கள் கலந்துகொள்ளும் நட்புமுறை இணைய விளையாட்டுப் போட்டி ஒன்றும் அதில் நடைபெறும்.
மரினா பே பயணப் படகு நிலையத்தை அந்தக் கப்பல் வந்து அடைந்தபோது ‘ராயல் மரின்ஸ்’ வாத்தியக் குழு இசை முழங்கியது. பள்ளிச் சிறுவர்களை உள்ளடக்கிய மக்கள் கூட்டம் பிரிட்டிஷ், சிங்கப்பூர் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றது.