அமைதித் திட்டத்துக்கு ஆசியாவின் ஆதரவை நாடும் உக்ரேனிய அதிபர்

2 mins read
87152728-4663-4daf-925f-6335ebaa55df
சிங்கப்பூரில் நடைபெறும் 21வது ஷங்ரிலா மாநாட்டில் ஜூன் 2ஆம் தேதி உரையாற்றிய உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

அரசதந்திரம் சிறந்த வழிமுறை என்றபோதும் அதற்கு அனைத்துலகச் சமூகத்தின் விருப்பமும் ஆதரவும் தேவை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஜூன் 15, 16ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் அமைதிக்கான உச்சநிலை மாநாட்டிற்கு அனைத்துலக ஆதரவை நாடி சிங்கப்பூரில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஷங்ரிலா கலந்துரையாடல்’ தற்காப்பு உச்சநிலை மாநாட்டில் ஜூன் 2ஆம் தேதி அவர் உரையாற்றினார்.

உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இடையே பொதுவான புரிதல் இருப்பதைக் காட்டுவதும் அதை ரஷ்யாவிற்கு எடுத்துக்கூறுவதும் இந்த மாநாட்டின் நோக்கம்.

நாகரிகமடைந்த உலகம், ஓர் ஆக்கிரமிப்பாளர் உக்ரேனைப் பறித்துக்கொள்வதை அனுமதிக்கவில்லை என்பதே, அனைத்துலகச் சமூகம் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையையும் மனித வாழ்வையும் மதிக்கிறது என்பதற்கான அடையாளம் என்று திரு ஸெலென்ஸ்கி தம் உரையில் கூறினார்.

மாநாட்டின் இறுதி அங்கத்தில் உரையாற்றிய அவர், “உலகம் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறது; முழுமையான இணக்கத்துடன் செயல்பட விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது,” என்றார்.

“உண்மையிலேயே உயிர்களைக் காப்பாற்றும் இலக்கு இருந்தால்தான் அரசதந்திரம் சிறந்த வழிமுறையாக விளங்கும்,” என்று உக்ரேனிய அதிபர் சொன்னார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் அமைதி மாநாடு ஆயுத ஆதரவைக் கோருவதன்று என்று அவர் வலியுறுத்தினார்.

“இது போரின் முடிவுக்கு ஆதரவு தருவது தொடர்பானது. போரைத் தடுப்பதும் அனைத்து வட்டாரங்களிலும் அவ்வாறே செயல்படுவதும் தொடர்பானது இது,” என்று அவர் கூறினார்.

ஆசியாவின் முதன்மைப் பாதுகாப்புக் கருத்தரங்கான ஷங்ரிலா கலந்துரையாடலில் உலகத் தலைவர்கள், தற்காப்பு அமைச்சர்கள், தற்காப்புத் துறைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், கல்விமான்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், மூன்றாம் ஆண்டாக நீடிக்கும் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்படி மாநாட்டில் கலந்துகொண்டோரைக் கேட்டுக்கொண்டார்.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னுடன் கைகுலுக்கிய உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடமிருந்து இரண்டாவது).
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னுடன் கைகுலுக்கிய உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஏஎஃப்பி

கேள்வி-பதில் அங்கத்தின்போது சிங்கப்பூர் இந்த விவகாரத்தில் எவ்வாறு உதவக்கூடும் என்ற கேள்விக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், உக்ரேனின் நிலைப்பாட்டை சிங்கப்பூர் கொள்கை அளவிலும் நடைமுறை ரீதியாகவும் வலுவாக ஆதரிப்பதாகக் கூறினார்.

படையெடுப்பு தொடங்கியபோதே ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்ததை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்