வர்த்தக விதிகள், செயல்முறைகள் எளிமையாக்கப்படும்

உலகளவில் கடுமையாகும் போட்டி

வர்த்தக விதிகள், செயல்முறைகள் எளிமையாக்கப்படும்

2 mins read
443cb73e-9a30-4e3b-bfc7-f706b9f287eb
ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான செயல்முறை எளிமையாக்கப்பட்டதால், அவற்றை நடத்துவதற்கான செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளவில் போட்டி அதிகரித்துவரும் வேளையில் வர்த்தகங்கள் புத்தாக்கத்தை வளர்க்கவும் செலவுகளைச் சமாளிக்கவும் உதவ, விதிமுறைகளை சிங்கப்பூர் எளிமைப்படுத்தும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வர்த்தகங்களுக்கு உகந்த சூழலை உறுதிசெய்வதில் சிங்கப்பூர் சிறப்பாகச் செய்துள்ளதாக அவர் சொன்னார்.

“ஆனாலும் காலப்போக்கில் விதிகள் அதிகரித்துள்ளன, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகக் கூடியுள்ளன.

“எனவேதான், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விதிகளையும் செயல்முறைகளையும் நாங்கள் மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

இதற்கு, ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான செயல்முறையை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

முன்னதாக, வானூர்தி நிகழ்ச்சி ஒன்றை நடத்த, அதற்கான அனுமதியை ஏற்பாட்டாளர்கள் பெற வேண்டியிருந்தது.

ஒவ்வொரு வானூர்தியும் பதிவுசெய்யப்பட்டு, அதில் ஒட்டுவில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டியிருந்தது.

அதன்படி, 1,000 வானூர்திகளைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிக்கு $25,000க்குமேல் செலவாகும்.

எனவேதான், அரசாங்கம் இதற்கான செயல்முறையைச் சீரமைத்தது.

அதன் பொருட்டு, எத்தனை வானூர்திகள் பயன்படுத்தப்பட்டாலும் நிகழ்ச்சிக்கு ஒரேயோர் அனுமதி மட்டும் தேவைப்படும். ஒட்டுவில்லை விதிமுறை மீட்டுக்கொள்ளப்பட்டது.

இதனால், 1,000 வானூர்தி நிகழ்ச்சிக்கான செலவு வெறும் $500ஆகக் குறைந்துள்ளது.

“என்றாலும், சில விதிகளைத் தளர்த்துவது என்பது, கூடுதல் அபாயங்களை ஏற்பதற்கு ஒப்பாகும். சிங்கப்பூரர்கள் இத்தகைய மாற்றங்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்றார் பிரதமர் வோங்.

விதிகள், செயல்முறைகள் மறுஆய்வை துணைப் பிரதமர் கான் கிம் யோங் பார்வையிடுவார் என்றும் அவற்றில் சில தளர்த்தப்படலாமா என்பதை ஆராய்வார் எனப் பிரதமர் வோங் சொன்னார்.

“இது நிச்சயம் நிலைமையை மேம்படுத்தும். வர்த்தகங்களுக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்குக் கைகொடுப்பதில் இது குறிப்பிடத்தக்க அளவு உதவும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்