2024 இறுதியில் மின்வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்டிகள் அறிமுகம்

1 mins read
b3bac294-e79d-421f-b9b9-fc051a55ace1
அதிவேக மின்னூட்டி நிலையம் குறித்த காணொளியைக் காணும் EVe நிறுவனத் தலைமை நிர்வாகி டெரிக் டான் (இடது), ஹுவாவெய் மின்னிலக்க ஆற்றல் சிங்கப்பூர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டெரி காவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அரைமணி நேரத்திற்குள் முழுமையாக மின்னூட்டம் செய்யும் அதிவேக மின்னூட்டிகள் சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிவாக்கில் நிறுவப்படும்.

இதன் தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் துணை நிறுவனமான ஈவி-எலெக்ட்ரிக் (EVe), சீனத் தொழில்நுட்பப் பெருநிறுவனமான ஹுவாவெய்யுடன் திங்கட்கிழமையன்று (மார்ச் 18) உடன்பாடு செய்துகொண்டது.

அந்த மின்னூட்டிகள் தென்கிழக்காசியாவிலேயே அதிவேகமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ள மின்னூட்டிகள்மூலம் மின்வாகனத்திற்கு முழுமையாக மின்னூட்டம் செய்ய எட்டு மணி நேரம்வரை ஆகிறது.

புதிய ஒப்பந்தத்தின்படி, மின்னூட்டிகளுக்கு மின்சாரம் வழங்க சூரிய மின்சக்திப் பலகைகளையும் மின்கல எரிசக்திச் சேமிப்பு அமைப்புகளையும் EVe, ஹுவாவெய் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.

அதிவேக மின்னூட்டிகளை நிறுவும் இடங்கள் குறித்து இன்னும் ஆலோசித்து வருவதாக EVe நிறுவனத் தலைமை நிர்வாகி டெரிக் டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

ஆயினும், ஒன்று அல்லது இரண்டு மின்னூட்டிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்றார் அவர்.

ஒரு மின்னூட்டி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு மின்வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்ய முடியும்.

அதிவேக மின்னூட்டிகளை நிறுவுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டில் அதிவேக மின்னூட்டிகளை அறிமுகம் செய்த ஹுவாவெய் நிறுவனம், இவ்வாண்டிற்குள் சீனாவில் 340க்கு மேற்பட்ட நகரங்களிலும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் அத்தகைய 100,000 மின்னூட்டிகளை நிறுவ இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்