தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் விக்டோரியா லேனிற்கு இடமாறுகிறது

3 mins read
ab3d70d7-5b19-48e5-96e0-cb0aa64e6f59
பீட்டி சாலையிலிருந்து விக்டோரியா லேனிற்கு இடமாறும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் பற்றி துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்தார். - படம்: த.கவி
multi-img1 of 6

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பீட்டி சாலையில் இயங்கிவரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2027ஆம் ஆண்டில் விக்டோரியா லேனில் அமைந்திருக்கும் முன்னாள் ஸ்டாம்ஃபோர்ட் தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு இடம் மாறுகிறது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் 48வது பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) இதனை அறிவித்தார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பீட்டி சாலையில் இயங்கிவரும் 2027 ஜனவரியில் இடம் மாறும் என்று கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

பீட்டி சாலை எண் 2ல் அமைந்துள்ள தற்போதைய வளாகத்தின் குத்தகை காலம் 2026 டிசம்பரில் முடிவடைவதால் இடமாற்றம் இடம்பெறுவதாக அறிக்கைக் குறிப்பிட்டது.

தற்போது பீட்டி சாலை எண் 2ல் இயங்கிவரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்.
தற்போது பீட்டி சாலை எண் 2ல் இயங்கிவரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். - படம்: த.கவி

விக்டோரியா லேன் எண் 1ல் அமையும் புதிய வளாகம் பரந்த கற்றல் சூழலும் மேம்பட்ட வசதிகளும் கொண்டதாக இருக்கும். கபடி போன்ற விளையாட்டுகளுக்குத் தகுந்த கூரைகள் கொண்ட விளையாட்டு மைதானம், நடைமுறை, தொழில்நுட்பக் கற்றலுக்காக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள் போன்றவை அங்கு அமையும்.

தற்போதைய வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட முக்கியச் சின்னங்கள் புதிய இடத்துக்கு மாற்றப்படும்.

புதிய வளாகத்தை, நிலையம் ஒரு பொருத்தமான பயனாளருடன் பகிர்ந்து பயன்படுத்தும். இதைப் பற்றிய மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

இடமாறுதல் சமூகத்துடன் இணைந்து முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்று தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான தினேஷ் கூறினார்.

நிகழ்ச்சியில் திரு தினே‌ஷ் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திரு தினே‌ஷ் உரையாற்றினார். - படம்: த.கவி

பழக்கப்பட்ட இடத்திலிருந்து புதிய இடத்துக்கு மாறினாலும், தமிழ் மொழி, பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நிலையத்தின் அர்ப்பணிப்பு என்றும் தொடரும் என்றார் அவர்.

“உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தமிழ் மாணவர்களுக்கு தரமான தமிழ்க் கல்வியை வழங்கி, தமிழ் அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளுக்குக் கைக்கொடுத்து, அரும்பணி ஆற்றி வருகிறது. பல தமிழ் ஆசிரியர்களையும் செய்தியாளர்களையும், படைப்பாளர்களையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து உருவாக்கும்,” என்று குறிப்பிட்டார் திரு தினே‌ஷ்.

Watch on YouTube

இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியக் கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா) போன்ற பங்காளிகளுக்கு அருகில் இருப்பதால், இந்திய கலை, கலாசாரப் பகுதியுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

நார்த்லைட் பள்ளி, ஹொங் வென் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளாகம் ஆகியவையும் அருகில் அமைந்துள்ளன என்று அமைச்சு சுட்டியது.

2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இடமாற்றம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய திருவாட்டி சாந்தி செல்லப்பன்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய திருவாட்டி சாந்தி செல்லப்பன். - படம்: த.கவி

“இப்பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெறும் அதே நேரத்தில், தற்போதைய வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடையூறின்றி தொடரும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

“வளர்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் நடத்துகின்ற தமிழ் மொழி விழாவில் நிலையத்தின் மாணவர்களை ஈடுபடுத்துவதுடன், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அதன் அரங்கைப் பயன்படுத்தும் வசதியையும் நிலையம் தொடர்ந்து வழங்கி வருகிறது,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு நசீர் கனி.

பரிசளிப்பு விழாவின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய உன்னத விருதை மாணவி முருகன் ருபிகா பெற்றார்.

பரிசளிப்பு விழாவுடன் தமிழ்த் திருவிழாவையும் நிலையம் சனிக்கிழமை கொண்டாடியது. பாரம்பரிய கலைகளிலும் விளையாட்டுகளிலும் கலைநிகழ்ச்சிகளிலும் மாணவர்களை நாள் முழுவதும் ஈடுபட்டனர்.

தமிழ்த் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுடன் திரு தினே‌ஷ் கலந்துரையாடினார்.
தமிழ்த் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுடன் திரு தினே‌ஷ் கலந்துரையாடினார். - படம்: த.கவி

துணை அமைச்சர் தினே‌ஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்