கெய்ரோ: காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தனது ஆறு ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகவை தெரிவித்துள்ளது.
அந்தப் பள்ளியின் மீதுபுதன்கிழமை செப்டம்பர் 11ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாண்டோரில் ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் பிரிவின் துயர்துடைப்பு முகாமின் மேலாளரும் அகதிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துகொண்டிருந்த மற்ற உறுப்பினர்களும் அடங்குவர் என்று அந்த முகவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஒரே தாக்குலில் தமது பிரிவைச் சேர்ந்த பலர் மாண்டது இதுவே முதல்முறை என்று அது கூறியது
இந்நிலையில், அகதிகளைக் குறிவைக்கவில்லை என்றும் ஹமாஸ் அமைப்பின் தளபத்தியத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
“போர் தொடங்கியதிலிருந்து அப்பள்ளி மீது ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் 12,000 அகதிகள் தங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்,” என்று ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகவை கூறியது.
இதற்கிடையே, ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டதுக்கு ஐநா தலைமைச் செயலாளர் ஆண்டனி குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐநா ஊழியர்களும் மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த ஊழியர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என்று அவர் சாடினார்.

