சிங்கப்பூரிலிருந்து நில எல்லையைக் கடந்து மலேசியாவில் உள்ள ஜோகூருக்கு சட்டவிரோத வாடகை வாகனச் சேவை வழங்கிய ஏழு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 22) தெரிவித்தது. தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய டாக்சி சங்கம் ஆகிய அமைப்புகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஆணையம் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில் அந்த ஓட்டுநர்கள் பிடிபட்டனர்.
அவர்கள் ஓட்டிய ஏழு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
ஆணையம் பகிர்ந்த புகைப்படங்களில் அந்த ஓட்டுநர்கள் பயனியர் வட்டாரத்திலும் சாங்கி விமான நிலையத்திலும் பிடிபட்டனர் என்று அறியப்படுகிறது.
உரிமம் இன்றி எல்லை கடந்து வாடகை வாகன ஓட்டுநர் சேவை வழங்குவோருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
அவ்வாறு சேவைகள் வழங்கும் ஓட்டுநர்களுக்கு $3,000 வரை அபராதமும் ஆறு மாதச் சிறையும் தண்டனையாக விதிக்கப்படுவதோடு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.
உரிமம் பெற்ற கிராப் நிறுவனம் அல்லது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டாக்சிகளை மட்டும் எல்லை கடந்த வாடகை வாகனச் சேவைகளுக்கு பயன்படுத்தும்படி பொதுமக்களை ஆணையம் கேட்டுக்கொண்டது.
ஜோகூரில் பயணிகள் இறங்கும் இடங்கள்
இவ்வாண்டு மே மாதம் முதல் ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ் சிட்டி, கூலாய், செனாய் ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட உரிமம் பெற்ற எல்லை கடந்த வாடகை வாகனச் சேவைகளுக்கு அனுமதி உள்ளது.
உரிமம் இன்றி அத்தகையச் சேவைகளை வழங்குவோர் குறித்து சந்தேகம் எழுந்தால், go.gov.sg/report-illegal-rides என்ற இணையத்தளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

