மருந்துகளுக்கான அமெரிக்காவின் புதிய வரிகள் சிங்கப்பூரில் ஏற்படுத்தும் தாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று நிபுணர்களும் நிறுவனங்களும் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் (சிஎன்ஏ) தெரிவித்துள்ளன.
மருந்து தயாரிக்கும் ஒரு நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தி ஆலையைக் கட்டாவிட்டால், எந்தவொரு வர்த்தகச் சின்னம் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள்களுக்கும் அக்டோபர் 1 முதல் புதிய 100 விழுக்காட்டு வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அறிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள மருந்துத் தொழில்துறை நிறுவனங்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறின. இவ்வேளையில், குறைந்தபட்சம் ஒரு நிறுவனமாவது அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தான் கவலை கொண்டுள்ளதாக சிஎன்ஏயிடம் கூறியுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஹில்மேன் ஆய்வகங்கள், அதன் சிங்கப்பூர் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை எதிர்பார்க்கவில்லை என்று கூறியபோதிலும் பாதிப்புகளின் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்தன.
“உடனடி நேரடி விளைவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை, சாத்தியமான தாக்கங்கள் குறித்துத் தாங்கள் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது,” என்றும் அது கூறியது.
கட்டணங்கள் காரணமாக ஏற்படும் அதிக செலவுகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, கட்டுப்படியாகக்கூடிய கட்டணச் சவால்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று ஹில்மேன் மேலும் விவரித்தது.
வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்வதில் உள்ள சவால்கள் குறித்துக் கேட்டபோது, ஹில்மேன் ஆய்வகங்கள், “முக்கியச் சவால் நிச்சயமற்ற தன்மை. வர்த்தகக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள், காலக்கெடு, ஆதாரங்கள் மற்றும் பங்காளித்துவத்தைப் பாதிக்கலாம். நமது அறிவியல், பொதுச் சுகாதார உறுதிமொழிகளில் உறுதியாக நிலைத்திருக்கும் அதே வேளையில், இந்த மாற்றங்களை எதிர்பார்ப்பதே நாம் செய்யக்கூடியது,” என்று விளக்கின.
மருந்து இறக்குமதி மீதான அமெரிக்க வரிகள் சிங்கப்பூரின் ஏற்றுமதியில் ஒரு முக்கிய பகுதியான மருந்துகள் துறையை அச்சுறுத்துகின்றன. அமெரிக்காவிற்கு சிங்கப்பூரின் ஏற்றுமதியில் 13 விழுக்காடு மருந்துகள் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்சவெட்டரி இக்கோனமிக் காம்பிளக்சிட்டி ஆய்வகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் சிங்கப்பூர் நான்காவது பெரிய நாடாக இருந்தது.
சிங்கப்பூரில் உள்ள மருந்து நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே அமெரிக்காவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதால், இந்த வரிகள் அவற்றின் ஏற்றுமதியில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.