சிங்கப்பூரில் பூனைகளைச் செல்லப்பிராணிகளாக வளர்க்க கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 41,000 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பூனைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் கட்டாயமாக உரிமம் பெற்றிருக்கவேண்டும் என்ற விதிமுறை ஓராண்டுக்கு முன் நடப்புக்கு வந்தது. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு நுண் சில்லுகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.
பூனை உரிமத்துக்காக முதல்முறையாக விண்ணப்பம் செய்வோர் செல்லப்பிராணி உரிமையாளருக்கான பயிற்சிகளை இணையம்வழி மேற்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.
அதையடுத்து நாய் உரிமையாளர்கள் உட்பட ஏறக்குறைய 41,500 பேர் உரிமையாளர் பயிற்சிகளுக்குச் சென்றிருப்பதாக விலங்கு, மருத்துவச் சேவை அறிக்கை வெளியிட்டது.
உரிமம் வழங்கப்பட்ட பூனைகளில் 95 விழுக்காட்டுக்குக் கருத்தடை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பூனை நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் செல்லப்பிராணிகளாகப் பூனைகளுக்கு உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. உரிமையாளர்கள் தங்கள் பூனைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதை அந்தத் திட்டம் உறுதிப்படுத்துகிறது.
2026, ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை உரிமையாளர்கள் தங்கள் பூனைகளுக்கு உரிமம் பெறுவதுடன் அவற்றின் உடலில் நுண் சில்லுகளை இலவசமாகப் பொருத்தலாம்.
அதையடுத்து, கருத்தடை செய்யப்பட்ட பூனைக்கு உரிமம் பெற $15 கட்டணம் செலுத்தவேண்டும். கருத்தடை செய்யப்படாத பூனைகளுக்கான உரிமங்களுக்கு $90 கட்டணம் செலுத்தவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
2026 செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து விலங்கு, பறவை சட்டத்தின்கீழ் உரிமம் பெறாத பூனைகளைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் 8,000க்கும் அதிகமான பூனைகளுக்கு 45 நிலையங்களில் இலவசமாக நுண் சில்லுகள் பொருத்தப்பட்டன.
தீவெங்கும் உள்ள விலங்குநல மருந்தகங்களில் 500க்கும் அதிகமான பூனைகளுக்கு நுண் சில்லுகள் பொருத்தப்பட்டன.