சொத்துச் சந்தையில் மந்தமாகச் செயல்படும் முகவர்களுக்கு மறுதேர்வு

சொத்துச் சந்தையில் மந்தமாகச் செயல்படும் முகவர்களுக்கு மறுதேர்வு

2 mins read
32c1a806-c729-4b67-a110-8b0c54acef09
சிங்கப்பூர் சொத்துச் சந்தை முகவர் மாநாட்டில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்து முகவர்கள் மூன்றாண்டு காலத்தில் குறைந்தபட்சம் மூன்று சொத்துப் பரிவர்த்தனைகளையாவது செய்து முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் முகவர்களுக்கான மறுதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

இந்தப் புதிய நடைமுறை 2027 ஜனவரி முதல் நடப்பிற்கு வரவுள்ளதாகச் சொத்து முகவர் மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், சொத்து முகவர்களுக்கான பதிவு, முகவைக்கான உரிமம் ஆகியன செல்லுபடியாகும் காலம் ஓராண்டிலிருந்து மூன்றாண்டாக அதிகரிக்கும் என்பதும் புதிய நடைமுறை ஆகும்.

சொத்துச் சந்தையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் நிபுணத்துவத் தரநிலையை உயர்த்தவும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டட விரிவான தொழில்துறை ஆய்வின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அமைகின்றன.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற சிங்கப்பூர் சொத்து முகவர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தேசிய வளர்ச்சி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், “பயனீட்டாளர்கள் தங்களது சொத்து முகவர்கள் அளிக்கும் ஆலோசனை ஆக அண்மைய விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பிரதிபலிக்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

“பெரும்பாலான சொத்து முகவர்கள், சந்தையில் நிலைத்திருக்கவும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவச் சேவைகளை வழங்கவும் தங்களை மேம்படுத்தி வருகிறார்கள்.

“அதேவேளை, நீண்ட காலமாக எந்த ஒரு சொத்துப் பரிவர்த்தனையையும் செய்து முடிக்காதவர்கள், சொத்துச் சந்தை தொடர்பான நடப்பு விதிகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பது குறித்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் பதிவுபெற்ற 32,967 முகவர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர், அதாவது 12,920 பேர் 2023ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தபட்சம் மூன்று குடியிருப்புச் சொத்துப் பரிவர்த்தனைகளைச் செய்யத் தவறியதாக சொத்து முகவர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதே காலகட்டத்தில், ஒவ்வொரு முகவரும் ஆண்டுதோறும் செய்து முடித்த குடியிருப்புச் சொத்துப் பரிவர்த்தனைகளின் இடைநிலை எண்ணிக்கை இரண்டாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்