எதிர்காலத்தை நிலைக்கச் செய்வதற்கு கடந்த காலத்தை அறிந்திடுக: ஜோசஃபின் டியோ

2 mins read
7916b77a-b2fb-4ebd-a5d7-779c575fc06f
சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தின் தொகுப்பான ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சி, ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூல் வெளியீட்டு விழாமேடையில், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் திருவாட்டி ஜோசஃபின் டியோ, மூத்த அமைச்சர் லீ சியன் லூங், தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் செர் போங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிலைநிறுத்த நாடு இன்று அடைந்திருக்கும் நிலைக்கு வித்திட்ட கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.

சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தின் தொகுப்பான ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூலைத் தொகுத்தவர் திருவாட்டி சூசன் லிம்.
சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தின் தொகுப்பான ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூலைத் தொகுத்தவர் திருவாட்டி சூசன் லிம். - படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அச்சகம்

சிங்கப்பூர்-மலேசியா பிரிவினை சார்ந்த வரலாற்றுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத பல முக்கிய அமைச்சரவைக் குறிப்புகள் மற்றும் தலைவர்களின் உரைகளைத் தொகுத்திருக்கும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திருவாட்டி டியோ, ஆண்டுகள் கடந்து செல்வதால், சுதந்திரத்திற்கு முந்தைய போராட்டங்களில் நேரடி அனுபவம் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறினார். 

அவ்வகையில், அத்தகைய முன்னோடித் தலைவர்கள் பார்வையில், சிங்கப்பூருக்காக அவர்கள் எடுத்த முடிவுகள், அதன் அடிப்படையிலான நாட்டின் வரலாற்றைப் பாதுகாப்பது முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தனிநாடாகத் திகழ்வதற்கு வழிவகுத்த சுதந்திரப் பயணத்தை விவரிக்கும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சியும் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தின் தொகுப்பான ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சி டிசம்பர் 8 தொடங்குகிறது.
சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தின் தொகுப்பான ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சி டிசம்பர் 8 தொடங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டியோ, ‘‘தேசிய நூலக வாரியமும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் இணைந்து வழங்கும் இந்தக் கண்காட்சி, எஸ்ஜி60ன் நிறைவு நிகழ்ச்சி.

‘‘தற்போது வெளியீடு கண்டுள்ள இந்த நூலும், நிறுவப்பட்டுள்ள கண்காட்சியும் அந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகத் தேசத்திற்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய பரிசு,’’ என்றார்.

சிங்கப்பூர், மலேசியா பிரிந்தது குறித்து இதர நூல்கள் இருந்தாலும் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965 வரை நடந்த அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக, அமைச்சரவையின் ரகசியக் குறிப்புகள், பிரிவினை என குரல் எழுப்பியவர்கள், அதனை ஆதரித்த, மறுத்த அரசியல் தலைவர்கள், அவர்கள் கைப்பட எழுதிய குறிப்புகள், வாய்வழி வரலாற்று நேர்காணல்கள் எனக் காலச்சுவடுகளாய்ப் போன பல்வேறு தகவல்களுக்கு உயிரூட்டப்பட்டு அவை முதன்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தந்தையாகக் கருதப்படும் திரு லீ குவான் யூ, சிங்கப்பூர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீ வகித்த இன்றியமையாத பங்கு, மலேசியத் தலைமைத்துவத்தில் இன்றியமையாத இடம் வகித்தவர்களான அப்துல் ரஹ்மான், துன் ரசாக் உள்ளிட்டோருக்கும் சிங்கப்பூர் தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த இறுதிக்கட்ட உரையாடல்கள் எனப் பல தொகுப்புகளுடன் கண்காட்சியும் நூலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் பார்வையாளர்கள்  நேரடியாகவே காண்பது போலத் தோன்றச் செய்யவும், அவர்கள் வரலாற்றை அறிவதுடன், அதனை உணரவும் கூடிய வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிய திருவாட்டி டியோ, இதனைக் காண இதுவரை சுமார் 10,000 பேர் பதிவுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

திங்கட்கிழமை (டிசம்பர் 8) தொடங்கும் இந்த நிரந்தரக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். நுழைவுச்சீட்டுகள் பதிவுக்கு https://thealbatrossfile.nlb.gov.sg இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்