தகவல், மின்னிலக்க மேம்பாட்டில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க, ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் குடும்ப இணை உபகாரச் சம்பளம் விருது விழாவில் 81 உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டன.
அதில் உரையாற்றிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அவசியத்தை வலியுறுத்தினார்.
“நான் இன்று பேசும் உரையில்கூட பெரும்பகுதியை ‘பேர்’ சேட்ஜிபிடியைப் பயன்படுத்திதான் என் சக ஊழியர்கள் எழுதியுள்ளனர் என நான் நம்புகிறேன். இதை நான் வரவேற்கிறேன். அப்படித்தான் நாம் தொழில்நுட்பத்தைக் கையாண்டு இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும்,” என்றார் திரு டான்.
“இன்று 150,000 அரசாங்க அதிகாரிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ‘ஓப்பன் டிவெலப்மண்ட் புரோடக்ட்ஸ்’ உருவாக்கிய பாதுகாப்பான சேட்ஜிபிடியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும் இன்னும் அறிவார்ந்த முறையில் பணியாற்ற, நம் சொந்த ‘போட்’ ஏஐ தளம் மூலம் ஆயிரக்கணக்கான சோதனைமுறை சேட்போட்களை உருவாக்கியுள்ளனர்,” என்றார் அவர்.
மத்திய சேம நிதிக் கழகம் மார்ச் முதல், ஏஐ மூலம் தொலைபேசி அழைப்புகளை ஒலிப்பதிவிலிருந்து சொற்களாக மாற்றும் பணியைச் செய்வதாகவும் அழைப்பவர்களில் தொழில்நுட்பத்தில் அதிக உதவி தேவைப்படுவோரைக் கண்டறியும் புதிய ஏஐ அம்சத்தைப் பரிசோதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஏஐ புரிதலை மேம்படுத்த அரசாங்கம் ‘அனைவருக்கும் ஏஐ’, ‘ஊழியர்களுக்கு ஏஐ’, ‘தலைவர்களுக்கு ஏஐ’ எனும் மூவகை உத்திமுறையைக் கையாள்வதை அவர் சுட்டினார்.
“தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ‘டிஜிட்டல் ஸ்கில்ஸ் ஃபார் லைஃப்’ திட்டத்தில் ஆக்கமுறை ஏஐ சார்ந்த வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
“தேசிய நூலக வாரியம் ஜென்ஏஐ போன்ற தொழிநுட்பங்கள்மூலம் எவ்வாறு வாசகர்களிடம் கூடுதலான வளங்கள், எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தலாம் என ஆராய்ந்து வருகிறது. S.U.R.E (Source, Understand, Research, Evaluate) போன்ற திட்டங்கள்மூலம் ஆக்கமுறை ஏஐ பற்றி பொதுமக்களுக்கு உணர்த்தியும் வருகிறது,” என்றார் திரு டான்.
தொடர்புடைய செய்திகள்
“ஐந்து ஆண்டுகளில் ஏஐ பயனர்களின் எண்ணிக்கையை 15,000க்கு, மும்மடங்காக்க விரும்புகிறோம். 2024ல் ஏஐ பயனர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25% வளர்ந்துள்ளது எனக் கணிக்கிறோம்.
“மூன்று ஆண்டுகளில் மாணவர்களுக்கான ஏஐ பயனர் பயிற்சியை மேம்படுத்த $20 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை முதலீடு செய்து, ஏஐ தொடர்பான எஸ்ஜி டிஜிட்டல் உபகாரச் சம்பளங்களை அதிகரிக்கிறோம்; ஏஐ தொடர்பான வெளிநாட்டு வேலைப்பயிற்சிகள் கிடைக்க உதவுகிறோம்,” என்றார் அவர்.