பிரச்சினை விளைவிக்கக்கூடிய பயணிகள் கப்பல், விமானங்களில் சிங்கப்பூர் வர தடை

3 mins read
2cc33270-04eb-48eb-a1f8-05c55d0dab28
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் புதிய சேவை நிலையத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கா. சண்முகம் (இடமிருந்து இரண்டாவது). - படம்: சாவ் பாவ்

சுகாதாரம், பாதுகாப்பு, குடிநுழைவு ஆகியவற்றில் சிங்கப்பூருக்குப் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய பயணிகளுக்குக் கப்பல், விமானங்களில் இங்கு வர தடை விதிக்கப்படவுள்ளது.

அத்தகையோர், சிங்கப்பூர் வரும் கப்பல், விமானங்களில் ஏறாமல் இருக்க குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் உத்தரவுகளைப் (என்பிடி) பிறப்பிக்கவிருக்கிறது. அத்தகைய உத்தரவுகளை அனைத்து ஆகாய, கடல் சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்த சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆகாய எல்லைகளில் என்பிடி முறை 2026ஆம் ஆண்டிலிருந்தும் கடல் எல்லைகளில் 2028ஆம் ஆண்டிலிருந்தும் நடைமுறைப்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

என்பிடி உத்தரவுக்கு இணங்க நடந்துகொள்ளாத பயண நிறுவனங்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சென்ற அண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி குடிநுழைவு (திருத்தம்) சட்டம் நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து முதலில் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிரச்சினை விளைவிக்கக்கூடிய பயணிகள் நில எல்லைகள்வழி சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு சில இடையூறுகள் இருந்தன. நில எல்லைகளில் பேருந்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பயணிகளின் விவரங்களை முன்னரே குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. நில எல்லைகளில் அதைச் செயல்படுத்துவது சவாலாக இருக்கும் என்பது காரணம்.

கப்பல், விமானச் சேவை நிறுவனங்கள், அவற்றில் சிங்கப்பூர் வருவோரின் தகவல்களைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் சமர்ப்பிப்பது இயல்பாக இருந்துவரும் ஒன்று. அதேவேளை, நில எல்லைகளில் அத்தகவல்களை உடனடியாகப் பெறுவது எளிதன்று என ஆணையம் குறிப்பிட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பு முறை மேம்படுத்தப்பட்டுள்ளதால் பிரச்சினை விளைவிக்கக்கூடிய பயணிகள் அதிகமானோரை, சிங்கப்பூர் வருவதற்கு முன்பு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் கூடுதலாக 43 விழுக்காட்டு வெளிநாட்டவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சில குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக முன்பு சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டவர்கள் அத்தகைய பயணிகளில் அடங்குவர்.

குரோஃபர்ட் ஸ்திரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் புதிய சேவை நிலையத்தின் (ஐஎஸ்சி) அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜூலை 31) நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொண்டார்.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் ஆணையம் உருமாற்றம் காண்கிறது என்றார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம்.

சென்ற ஆண்டு சிங்கப்பூரின் சுங்கச் சாவடிகளைக் கடந்தோரின் எண்ணிக்கை 230 மில்லியனாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, 2015ல், 197 மில்லியனாக இருந்தது என்பதை திரு சண்முகம் சுட்டினார்.

எல்லைகளில், ஜோகூர் பாரு-சிங்கப்பூர் பெருவிரைவு ரயில் சேவை, சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையம் போன்ற புதிய சேவைகள் வழங்கப்படவிருக்கும் நிலையில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.

“எனினும், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் மனிதவளம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க முடியாது. அதனால், பயணத் தேவைகளைக் கையாண்டு மேலும் சிக்கலாக இருக்கும் பாதுகாப்புச் சூழலைச் சமாளிக்கவும் நாங்கள் கூடுதலாகத் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்திவருகிறோம்,” என்றும் அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்