அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே உள்ள வர்த்தக உறவு மோசமடைந்தால் அது உலக நாடுகளுக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும், உலகப் பொருளியல் பாதிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாடுகளின் வர்த்தகங்களுக்கு ஏற்றவாறு அடிப்படை வரிவிதிப்பை அறிவித்தார்.
இந்த வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பிரதமர் வோங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகப் பூசல் தொடர்பாக அவர் அக்கறை தெரிவித்தார்.
“சீனாவை உத்திபூர்வ போட்டியாளராகவும் ஆபத்தாகவும் அமெரிக்கா பார்க்கிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது எண்ணுகிறது. இப்போதும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“சீனா பதிலுக்குப் பதில் வரி விதிக்கவும் வர்த்தகப் போருக்குத் தயாராக இருப்பதாககவும் தெரிவித்துள்ளது. சீனாவின் பதிலடி வரி விதிப்புக்குத் தற்போது அமெரிக்கா கூடுதலாக 50 விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. அதற்குச் சீனா இறுதிவரை போராடத் தயார் என்று சூளுரைத்துள்ளது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
இரு நாடுகளும் இதுகுறித்து பேச சில வழிகள் உள்ளன. அவை அவற்றின் உறவை வலுப்படுத்தக்கூடும் என்றார் அவர்.
“வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றிய காலம் மறையத் தொடங்கியுள்ளது.
“தற்போதைய புதிய காலகட்டம் மிகவும் நிச்சயமற்றது. அதனால் சிங்கப்பூர் தனக்கு என வகுத்த கொள்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும்,” என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த மார்ச் மாதம் சீன இறக்குமதிகளுக்கு திரு டிரம்ப் 20 விழுக்காடு வரி விதித்தார். கடந்த வாரம் 34 விழுக்காடு வரி கூட்டப்பட்டது. தற்போது கூடுதலாக 50 விழுக்காடு வரி எனச் சீன இறக்குமதிகளுக்கான வரி 104 விழுக்காட்டை எட்டக்கூடும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
“புதிய வரிவிதிப்பால் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஆசிய நாடுகள்தான். குறிப்பாக சீனாவுக்கு பேரடியாக இருக்கும்,” என்றார் அவர்.