தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் வெற்றி: பிரதமர் வோங், மசெகவிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

3 mins read
c902725c-124b-4d6c-bcfc-d2226c02d92b
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவரது தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மார்சிலிங் சந்தைக்குச் சென்று குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவரது மக்கள் செயல் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா, புதிய அரசாங்கத்துடன் அணுக்கமாகப் பணியாற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் விரும்புவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சனிக்கிழமை (மே 3) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“ஏறத்தாழ 60 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வலுவான உத்திபூர்வப் பங்காளித்துவமும் பாதுகாப்பான, தடையற்ற, வளமான இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கான கடப்பாடும் நிலவுகிறது,” என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடனும் பிரதமர் வோங்குடனும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றிப் பொருளியல் வளர்ச்சி, இருதரப்புத் தற்காப்பு, பாதுகாப்பு உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த விரும்புகிறோம். அமெரிக்கர்கள், சிங்கப்பூரர்கள், வட்டாரத்தில் உள்ள மற்றவர்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயலாற்ற விரும்புகிறோம்,” என்று திரு ரூபியோ கூறியுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியமைக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 4) ஃபேஸ்புக்கில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“புதிய தவணைக் காலத்தில் தாங்களும் தங்கள் குழுவினரும் பொறுப்புகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்ற வாழ்த்துகிறேன்,” என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் ரீதியாக மலேசியாவும் சிங்கப்பூரும் பிணைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிய அவர், அடுத்துவரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தத் தேர்தல் வெற்றி சிங்கப்பூரர்கள் பிரதமர் வோங் மீதும் மக்கள் செயல் கட்சி மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் தொடர்ந்து வெற்றிகரமாகச் சிங்கப்பூரை வழிநடத்தும் என்று அவர் தமது எக்ஸ் தளப் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா, பிரதமர் வோங்குடன் மேலும் அணுக்கமாகப் பணியாற்ற விரும்புவதாகவும் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருதரப்புப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

“உங்களது வலுவான வெற்றிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் சிங்கப்பூரும் வலுவான, பன்முகப் பங்காளித்துவத்தைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் அணுக்கமான உறவுகள் இருப்பதைச் சுட்டினார்.

“தங்களுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி, நமது விரிவான, உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்த விரும்புகிறேன்,” என்று இந்தியப் பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்ஸன் தமது வாழ்த்துச் செய்தியில், சிங்கப்பூரும் நியூசிலாந்தும் வலுவான, நீடித்த நட்பைப் பேணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 60 ஆண்டுகால அணுக்கமான உறவை இந்த ஆண்டுப் பிற்பாதியில் கொண்டாடவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் ஆகியோரும் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காட்டு வாக்குகளுடன் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 2020ல் நடந்த பொதுத் தேர்தலில் அது 61.24 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்