தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கக் கட்டுப்பாடுகள், சிங்கப்பூர் சட்டங்களுக்கு என்விடியா இணங்க வேண்டும்: வர்த்தக, தொழில் அமைச்சு

2 mins read
51ef0647-02bc-43d0-bd0d-efb78bf87ae0
சீனாவின் தயாரிப்பில் டீப்சீக் என்ற செயற்கை நுண்ணறிவுத் தளம் உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா தான் விதித்த தடையைத் தாண்டி அதற்கான நிவிடியா சில்லுகளை மற்ற நாடுகளிலிருந்து சீனா பெற்றிருக்குமோ என விசாரித்து வருகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் என்விடியா நிறுவனம், அமெரிக்கா விதித்திருக்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கும் சிங்கப்பூரின் சட்டங்களுக்கும் இணங்கிச் செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சீனாவின் டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்க, சிங்கப்பூரில் இருந்திருக்கக்கூடிய தரப்பினரின் வாயிலாக என்விடியாவின் மின்சில்லுகள் பெறப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதன் தொடர்பில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வர்த்தக, தொழில் அமைச்சு பதிலளித்தது.

“ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருள்களை டீப்சீக், சிங்கப்பூரிலிருந்து பெற்றது என்ற எண்ணம் தலைதூக்குவதற்குக் காரணம் ஏதும் கிடையாது,” என்று வர்த்தக, தொழில் அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

டீப்சீக் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை சீனா மற்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட கணினிச் சில்லுகள் துணையுடன் உருவாக்கிக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு எழுந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான விசாரணையைத் துவக்கியிருக்கும் அமெரிக்கா சிங்கப்பூரையும் தனது விசாரணை வளையத்தில் சேர்த்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்குவதில் ஒன்றோடு ஒன்று போட்டியில் இறங்கியிருக்கின்றன. இதனால், பல நாடுகள் சில்லுகள் வாங்குவதை, அவ்வாறு முறைப்படி வாங்கப்படும் சில்லுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றவற்றில் அதிக அளவில் ஈடுபாடு காட்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவை சீனா தனது தற்காப்பு, மற்ற முக்கிய துறைகளில் பயன்படுத்துவதை அமெரிக்கா கட்டுப்படுத்த முனைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே அந்நாடு, சீனாவுக்கு விற்கப்படக்கூடிய சில்லு வகைகளை விரிவுபடுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இதன் தொடர்பில் இந்தத் தடையை அது பல்வேறு நாடுகளுக்கும் விதித்துள்ளது.

சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் செயற்கை நுண்ணறிவுத் தளம் கூகல், ‘ஓபன்ஏஐ’ போன்றவற்றுக்கு இணையாக திறன்கொண்டதாக, ஆனால் அதைவிடப் பன்மடங்கு குறைந்த விலையில், உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுவதாக இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்