சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக பசுமையான, வளமான நாடாக சிங்கப்பூரை திகழச் செய்யும் இலக்குடன் ‘பசுமையாவோம் எஸ்ஜி 2025’ இயக்கம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் பருவநிலை மீள்திறனையும் பேணும் நோக்குடன் இந்த ஆண்டிற்கான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மே 16ஆம் தேதி சங்காட் தொடக்கப்பள்ளியில் தொடங்கிவைக்கவுள்ளார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் ஆதரவுடன் இடம்பெறும் இந்த இயக்கம், பசுமையான, செழுமையான சிங்கப்பூரை நோக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை சிங்கப்பூரர்களிடையே ஊக்குவிப்பதற்காக அமர்வுகள், பயிலரங்குகள், சுற்றுலா, கண்காட்சிகள் என 900க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு களம் காணவுள்ளது.
பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 400 பங்காளிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து பசுமையான சூழலை காக்கும் நோக்கில் இவ்வாண்டிற்கான இயக்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளதை அமைச்சின் செய்திக்குறிப்பு சுட்டியது.
கூடுதல் சிறப்பம்சமாக, நாட்டின் கடல்சார் நீடித்த நிலைத்தன்மையைப் பறைசாற்றும் வகையில், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் ஒத்துழைப்போடு தென்தீவுகளில் வழிகாட்டப்பட்ட படகுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்திப் பண்ணையில் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்க எண்ணற்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தலைமுறை சார்ந்த பிணைப்புடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள், பள்ளிகள், பாலர் பள்ளிகள் உள்ளிட்ட இதர பங்காளிகளுடன் வலுவான சமூகக் கூட்டாண்மைகளை உருவாக்குதல் உட்பட பல்வேறு குறிக்கோள்களை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேலும் வலுவுறச் செய்ய வழிகோலும் இந்த நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கான பதிவு திங்கட்கிழமை (மே 12) தொடங்குகிறது.
சிறார் மத்தியிலும் சுற்றுச்சூழல் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 1,000க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளுக்கு தேசிய அளவிலான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கம் பற்றிய கற்றல் ஏடுகளை அமைச்சு வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டிற்கான இயக்கம் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இயக்கத்தில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள பொதுமக்கள் மே 12ஆம் தேதிமுதல் www.gogreen.gov.sg எனும் இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்.