சமூகங்களுக்கு இடையிலான தொடர்பு, அக்கறை, மீள்திறன் ஆகியவை தொடருமேயானால் சிங்கப்பூர் பேணும் நல்லிணக்கமும் நிலைத்தன்மையும் கட்டிக்காக்கப்படும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
காலித் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திரு ஃபைஷால் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மத்திய கிழக்கில் அண்மையில் நடந்த தாக்குதல்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அவற்றைப் புறந்தள்ள முடியாது என்றார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம். அத்துடன், நாம் பெருமுயற்சி செய்து கட்டியெழுப்பிய சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, தொடர்ந்து அமைதியைக் கட்டிக்காத்து, ஒற்றுமையாக இருக்கவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
‘கர்யா’ என்று அழைக்கப்படும் உள்ளூர் முஸ்லிம் சமூகக் குழுக்களின் தலைவர்கள், தொண்டூழியர்கள், சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத் (முயிஸ்) தலைவர் மற்றும் மேலாண்மைக் குழுவின் மூத்த உறுப்பினர்கள், காலித் பள்ளிவாசலை வழிநடத்தும் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 150 பேர் நோன்பு துறந்தனர்.
இவ்வாண்டு ‘கர்யா’ குழுக்கள் சிங்கப்பூர் முழுவதும் ஏறத்தாழ 15,500 தொழுகை இடங்களை வழங்கியுள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், சுவா சூ காங், தெங்கா போன்ற வட்டாரங்களில் தொழுகைக்கான புதிய இடங்கள் நிறுவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று திரு ஃபைஷால் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சவாலான நேரங்களில் இது போன்ற அடிப்படை முயற்சிகள் மிகவும் முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

