ஒன்றுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்திற்கும் சிங்கப்பூருக்கும் பெரும்பலம்: பிரதமர் வோங்

ஒன்றுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்திற்கும் சிங்கப்பூருக்கும் பெரும்பலம்: பிரதமர் வோங்

1 of 2
படம்: சுந்தர நடராஜ்
படம்: சுந்தர நடராஜ்

19 Sep 2026 - 9:12 pm

4 mins read

அனைவரும் இணைந்து செயல்படும்போது தமிழ்ச் சமூகம் செழித்தோங்குவதோடு சிங்கப்பூரும் மேலும் வலிமைபெறும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், நமது பாரம்பரிய அடையாளங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதும், சமூகத்தோடு இணைந்திருப்பதும் மிக முக்கியம் என்ற பிரதமர் வோங், நமக்கு உதவிய சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும்போதே மேலும் வலிமையடைகிறோம் என்று சொன்னார்.

‘தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூர்’ ஹோட்டலில் சனிக்கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு பவள விழா இரவு விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு வோங் இதனைத் தெரிவித்தார்.

வேரூன்றிய பண்பாடு சமூகத்திற்கு மிகவும் முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “நமது பண்பாட்டு மரபைப் புரிந்துகொண்டு, நாம் எந்த விழுமியங்களுக்காக நிற்கிறோம் என்பதை அறிந்து, நமது அடையாளம் குறித்த தெளிவான உணர்வுடன் இருந்தோம் எனில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் ஈடுபாடுகொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்த் தமிழர்களின் புதிய தலைமுறையினர் தங்களது பண்பாட்டு மரபைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தோடு பிணைந்திருக்கவும், தங்களது தமிழ், சிங்கப்பூர் என்ற இரு அடையாளங்கள்மீது பெருமிதம்கொள்ளவும் தமிழர் பேரவை போன்ற சமூக அமைப்புகள் இன்றியமையாத பங்காற்றி வருவதாகத் திரு வோங் பாராட்டினார்.

மேலும், கல்வியை வாய்ப்புகளுக்கான வழியாகக் கொண்டு, இளையர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல், தலைமைத்துவ வளர்ச்சி ஆகியவற்றில் பேரவை கவனம் செலுத்துவதையும் அவர் மெச்சினார்.

‘இணை’ எனப்படும் இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவைச் சுட்டிக்காட்டிய அவர், 75 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர் பேரவை அமைப்புகளை ஒன்றிணைத்த வழியிலேயே அக்குழுவும் செயல்படுகிறது என்றார்.

அன்று சமய அடிப்படையில் தனித்தனியாக இயங்கிவந்த தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்தது என்பது அவை தங்களுடைய தனித்துவமான அடையாளங்களை விட்டுக்கொடுத்ததாகப் பொருள்படாது என்றும் அவர் சொன்னார்.

“ஒவ்வோர் அமைப்பும் தனக்கான பங்கை ஆற்றிய அதேவேளையில், பரந்த சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயல்பட்டன,” என்றார் திரு வோங்.

‘தனிமரம் தோப்பாகாது’ எனும் தமிழ்ப் பழமொழியை மேற்கோள் காட்டிய பிரதமர், நாம் இணைந்து வளரும்போது நம் சமூகம் மேலும் வலுவடைவதாகக் குறிப்பிட்டார்.

தமிழர் பேரவை பவள விழாக் கொண்டாட்ட நிகழ்வில் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், 42 இணை அமைப்புகளின் பேராளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, ‘களரி அகாடமி’ குழுவினரின் இந்தியத் தாள வாத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து, மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து பிரதமரும் இந்தியத் தாள வாத்தியக் கருவியை இசைத்து மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழர் பேரவையின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை விவரிக்கும் நினைவு மின்னூலும் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமும் வெளியீடு கண்டன.

இவ்விழாவைச் சிறப்பாக நடத்துவதற்காகக் கடந்த ஆறு மாதங்களாகத் தங்களது குழுவினர் உழைத்துள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் முகமது பிலால் தெரிவித்தார்.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளை இணைக்கும் வலுவான பாலமாகத் தமிழர் பேரவை செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், வெவ்வேறு நல்ல நோக்கங்களுடன் இயங்கும் அமைப்புகளை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் ஒன்றிணைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“75 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு மட்டுமன்று. அது சமூக நம்பிக்கையின் அளவுகோல். நமது வரலாற்றை நினைவுகூர்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல நமது எதிர்காலத்தைக் கற்பனை செய்து திட்டமிடுவதும் அவசியம்,” என்று தமிழர் பேரவையின் தலைவர் வெ. பாண்டியன் கூறினார்.

அடுத்த ஆண்டில் 42 இணை அமைப்புகளுடன் இணைந்து ‘தமிழர் திருவிழா’ நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் திகழும் நிலையில், தமிழர் பேரவை அதன் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து பங்களிக்கும் என்று நம்புவதாக கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் ராஜா முகமது கூறினார்.

இரு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து, தங்களது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர் பேரவை சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட முக்கிய அமைப்பு என்று நாகப்பட்டினம் சங்கத்தின் செயலாளர் சலாஹுத்தீன் பஷீர் குறிப்பிட்டார்.

“தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் இத்தகைய பெரிய அமைப்புடன் இணைந்து செயல்படுவது எங்களுக்குப் பேராதரவாக இருக்கிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் பிற இன மக்களுடன் இணைந்து வாழும் நிலையில், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
தமிழர் பேரவைபவள விழாலாரன்ஸ் வோங்தமிழ்சிங்கப்பூர்