உள்நாட்டு ஒற்றுமையே வலிமையான வெளியுறவுக் கொள்கையின் அடிநாதம்: ஸூல்கர்னைன்

உள்நாட்டு ஒற்றுமையே வலிமையான வெளியுறவுக் கொள்கையின் அடிநாதம்: ஸூல்கர்னைன்

2 mins read
5490ef2c-d354-421e-80eb-8bcd8a5f1dfe
வெளியுறவுத் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூர், உள்நாட்டில் வலிமையோடும் ஒற்றுமையோடும் இருப்பதன் மூலமே வெளிநாடுகளில் வெற்றி பெறமுடியும் என்று வெளியுறவுத் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் கூறினார்

அனைத்துலக நிகழ்வுகள் குறித்து வெவ்வேறு கருத்துகள் இருந்தபோதிலும், தேசிய நலன் சார்ந்த அம்சங்களில் சிங்கப்பூரர்கள் ஒன்றுபட்டு நிற்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

வெளியுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) திரு ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் உரையாற்றினார்.

வெளிநாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ஒற்றுமை உணர்வைப் பேணுவதும் சிங்கப்பூரின் விழுமியங்களுக்கு உண்மையாக இருப்பதும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். 

‘‘பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக இருப்பதால், அனைத்துலக நிகழ்வுகள் குறித்த சிங்கப்பூரர்களின் கருத்துகள் அவ்வப்போது மாறுபடலாம். எனினும் அவை நமக்குள் பிளவை ஏற்படுத்த நாம் ஒருபோதும் அனுமதித்ததில்லை,’’ என்றார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சருமான திரு ஸூல்கர்னைன்.

காஸா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அந்த இடரின்போது பல்வேறு இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து, உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, காஸா மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்க முன்வந்ததைக் காணமுடிந்தது. ஒட்டுமொத்தச் சமூகத்தின் முயற்சி நெகிழச் செய்ததாகத் திரு ஸுல்கர்னைன் குறிப்பிட்டார்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்க ஜோர்டான், எகிப்து போன்ற மத்திய கிழக்கு வட்டாரப் பங்காளித்துவ நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து பணியாற்றிவருவதாக அவர் சுட்டினார். உலகின் பிற பகுதிகளில் நிலவும் மனிதநேய நெருக்கடிகளுக்கும் உதவிக்கரம் நீட்டப்படுவதாக அவர் சொன்னார். 

கடந்த ஆண்டு தென்கிழக்காசியாவிலும் தெற்காசியாவிலும் அடுத்தடுத்து இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தன. அப்போது சிங்கப்பூரர்கள் முன்வந்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் பிற தொண்டு நிறுவனங்களின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கும் ஆதரவளித்ததை நினைவுகூர்ந்தார் துணையமைச்சர். இந்த “ஒற்றுமை உணர்வு” முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளியுறவுக் கொள்கை சார்ந்து நாடு எடுக்கும் முடிவுகள் சில பெரிய வல்லரசுகளுக்கோ வெளிநாடுகளுக்கோ அதிருப்தியை ஏற்படுத்தலாம். கடினமாக இருந்தாலும், தேசிய நலனைக் காக்கவே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் திரு ஸுல்கர்னைன்.

அண்டை நாடுகளுடனான நல்லுறவில் சிங்கப்பூரின் வெற்றி பின்னிப்பிணைந்துள்ளது.

வட்டாரத்துடனும் அண்டை நாடுகளுடனுமான நல்லுறவில் சிங்கப்பூரின் வெற்றி பின்னிப்பிணைந்துள்ளது என்றார் திரு ஸுல்கர்னைன். எந்தவொரு நெருங்கிய உறவிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு நிகழும்போது, பரஸ்பர மரியாதை, நல்லெண்ணம், பொதுவான நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் கையாளப்படுவதாக அவர் சொன்னார். 

மலேசியா, இந்தோனீசியா, புருணை ஆகிய நாடுகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பையும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதற்குச் சிங்கப்பூர் அணுக்கமாய்ப் பணியாற்றி வருவதாகவும் திரு ஸுல்கர்னைன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்