அமைதி வாரியத்தில் இணையும்படி அமெரிக்கா விடுத்த அழைப்பை சிங்கப்பூர் இன்னும் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
என்றபோதும், அண்மையில் வாஷிங்டனில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டவை உட்பட இதர முயற்சிகளையும் சிங்கப்பூர் கவனத்தில் கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் விவியன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அன்று தெரிவித்தார்.
காஸா அமைதித் திட்டத்தின் நீட்சியாக அமைதி வாரியத்தை முன்வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கா தலைமை வகிக்கும் இந்த அமைதி வாரியம் முன்வைத்த இலக்குகளைப் பார்வையிட அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் கிட்டத்தட்ட 50 நாடுகள் கலந்து கொண்டன.
இதற்கிடையே அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த விவாதத்தின்போது ஜனவரி மாதம் அமைதி மன்றத்தில் இணையும்படி சிங்கப்பூருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் அமைச்சர்.
காஸாவில் அமைதி மற்றும் மறுகட்டமைப்பு சார்ந்த முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று உறுதி கூறினார் அவர்.
நாடுகளின் நல்லுறவுகள் விதிகளாலும் ஒருமித்த கருத்தாலும் மட்டுமே செயலாக்கம் காணாத உலகில் தற்போது இருப்பதாகக் குறிப்பிட்டார் திரு விவியன். தமது உரையின்போது பாலஸ்தீனம் குறித்த சிங்கப்பூரின் நீண்டகால நிலைப்பாடு பற்றியும் அவர் பேசினார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு மன்றம் கொண்டிருக்கும் முறையான தீர்மானங்களுடன், இருநாட்டுத் தீர்வு குறித்த நேரடிப் பேச்சுவார்த்தையே அவ்விவகாரத்தில் அமைதிக்கான பாதை. இதுவே சிங்கப்பூர் நீண்டகாலமாக கொண்டிருக்கும் நிலைப்பாடு. அது தற்போதும் தொடர்வதாக மேலும் கூறினார் அமைச்சர் விவியன்.

