‘ஏஐ’ கொண்டு திருத்தப்படும் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுகள்

‘ஏஐ’ கொண்டு திருத்தப்படும் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுகள்

2 mins read
29b8903a-cfd5-40d9-80e2-84e9928e2f4d
கிரேட்ஸ்கோப் செயற்கை நுண்ணறிவு அம்சத்தைக் கொண்டு தேர்வுகள் திருத்தப்படுகின்றன. - படம்: சேப்மன் பல்கலைக்கழகம்

சிங்கப்பூரின் சில பல்கலைக்கழகங்களில் அண்மைக் காலமாக செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மாணவர்கள் எழுதும் தேர்வுகள் திருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவை கிரேட்ஸ்கோப் எனும் ஏஐ அம்சத்தைப் பயன்படுத்தி தேர்வுகளைத் திருத்துகின்றன.

இதன்படி, கேள்விகளுக்கு மாணவர்கள் அளித்துள்ள பதில்களை ஆராய்ந்து ஒரே வகையான பதில்களை ஒரு பிரிவாக கிரேட்ஸ்கோப் ஒன்றுசேர்க்கும். பிறகு அந்தப் பிரிவுக்குள் வரும் மாணவர்களுக்குத் தேர்வைத் திருத்தும் மனிதர் ஒரே மதிப்பெண்களை வழங்குவார்.

இதன்மூலம் தேர்வுத்தாளைத் திருத்துபவர் எல்லா தேர்வு பதில்களையும் தாங்களே ஆராயத் தேவையிருக்காது. நேரம் மிச்சமாகிறது.

செயற்கை நுண்ணறிவின் உதவியோடு தேர்வுகளைத் திருத்தும் முறையை சிங்கப்பூரின் நான்கு பொது பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கின்றன.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் ஏஐ முறை மூலம் தேர்வுத் தாள்களைத் திருத்தம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை. திருத்தும் முறை சரியாக இருக்குமா, நம்பகத்தன்மை இருக்குமா போன்ற அக்கறைகள் காரணமாக அவ்விரண்டு பல்கலைக்கழகங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை எனத் தெரிவித்துள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் தங்கள் பாடங்களில் ஏஐயைப் பயன்படுத்தியதற்காகத் தண்டிக்கப்பட்டனர். அதனையடுத்து உயர் கல்வியில் ஏஐயின் பங்கு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சிங்கப்பூரின் ஆறு பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவைப் (generative AI) பயன்படுத்த அனுமதிக்கின்றன. அதை எந்த அளவு பயன்படுத்தலாம் என்பது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கல்வி நிலையங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

எனினும், கல்வி சார்ந்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த எப்போது, எந்த அளவு ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மாணவர்கள் தெரியப்படுத்துவது கட்டாயமாக இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்