உரிமமின்றி ஊழியர் தங்குவிடுதி: நிறுவனத் தலைவர் பதவி விலகல்

உரிமமின்றி ஊழியர் தங்குவிடுதி: நிறுவனத் தலைவர் பதவி விலகல்

கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 3:27 pm

1 mins read

உரிமமின்றி வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியை நடத்த அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, மெட்ரோகான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆல்வின் லிம் யீ ஹோங் பதவி விலகினார்.

அவ்விவகாரம் தொடர்பில் லிம்மும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவரும் மனிதவள அமைச்சுடன் மேற்கொண்ட தொடர்புகள், விசாரணைகள் குறித்து நிறுவனத்தின் இயக்குநரவையிடம் முன்னரே தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

ஹட்டன் லேண்ட் என முன்னர் அழைக்கப்பட்ட மெட்ரோகான் கட்டுமானப் பொறியியல் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரரான எல்பிடி பொறியியல் நிறுவனத்திலும் லிம் பொது மேலாளராக இருந்து வருகிறார்.

சுங்கை காடுட் லூப்பில் 2025 ஜூலைக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் உரிய உரிமமின்றி வெளிநாட்டு ஊழியர் விடுதியை நடத்தியதாக எல்பிடி நிறுவனத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உரிமமின்றி அந்தத் தங்குவிடுதி இயங்கிவந்தது இவ்வாண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

எல்பிடி நிறுவனத்திடம் செல்லத்தக்க உரிமம் இல்லை என்பது தெரிந்திருந்தபோதும், அதன் வளாகத்தில் தங்குவிடுதி செயல்பட அனுமதித்த குற்றச்சாட்டை லிம் எதிர்நோக்குகிறார்.

ஆயினும், மெட்ரோகான் மீதோ அதன் துணை நிறுவனங்கள் மீதோ எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

இவ்வழக்குத் தொடர்பில் முதல் நீதிமன்ற விசாரணை அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்மீதான குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடப் போவதாக லிம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திங்கட்கிழமை (நவம்பர் 2) மெட்ரோகான் நிறுவனத்தின் பங்குவிலை கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைந்தது.

குறிப்புச் சொற்கள்