உள்ளூர் இணைய வர்த்தகத் தளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் விற்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுகாதாரப் பொருள்களைச் சுகாதார அறிவியல் ஆணையம் நீக்கியுள்ளது.
முதன்முறையாக முன்னணி இணைய வர்த்தகத் தளங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மொத்தம் 3,336 சுகாதாரப் பொருள்களை அத்தளங்களின் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியதாக ஆணையம் புதன்கிழமையன்று(நவம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும்,அப்பொருள்களை விற்ற 1,471 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியது.
செப்டம்பர் மாதம் 23ஆம் தேதிக்கும் அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆணையத்துடன் இணைந்து அமேசான் சிங்கப்பூர் (Amazon Singapore), கரோசல் (carousell), இபே சிங்கப்பூர் (ebay singapore), ஷாப்பி (shopee) உள்ளிட்ட எட்டு இணைய வர்த்தகத் தளங்கள் இந்தக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சுகாதாரப் பொருள்களை நம்பிக்கைக்குரிய விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கும்படி ஆணையம் அறிவுறுத்தியது.


