பிடோக்கில் வரி செலுத்தப்படாத மதுபானங்கள் பறிமுதல்: இருவர் கைது

பிடோக்கில் வரி செலுத்தப்படாத மதுபானங்கள் பறிமுதல்: இருவர் கைது

1 mins read
மலேசிய ஆடவரும் சீன நாட்டைச் சேர்ந்த ஆடவரும் கைது செய்யப்பட்டனர்
efefd1dd-1a2e-45fd-8373-658282875d7e
வரி செலுத்தப்படாத மதுபானங்கள் பல பெட்டிகளில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை

சிங்கப்பூர் சுங்கத் துறை மே 5ஆம் தேதி நடத்திய அமலாக்க நடவடிக்கையில், 9,200 மதுபான வகைகள் கையளவு கலன்களிலும் (கேன்) புட்டிகளிலும் (போத்தல்) அதிகாரிகளால் பிடோக் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை 13 சரக்குப் பொருள்கள் அடுக்கிவைக்கப்படும் ‘பேலட்’ எனப்படும் சதுரங்க வடிவான அமைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சாதாரண சுவைபானங்கள் என்று முத்திரைகள் இடப்பட்டிருந்த மற்ற பொருள்களுக்கு இடையே அவை மறைத்து வைக்கப்பட்டன.

பிடோக் நார்த் அவென்யு 4ல் உள்ள கட்டடத்தில் அவை மிகச் சாதுரியமாக ‘மது அல்லாத பானம்’ என்று பெயரிடப்பட்ட முத்திரைகளுடன் மற்ற பொருள்களுக்கு இடையே அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் விவரங்களை சிங்கப்பூர் சுங்கத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

25 வயது மலேசிய ஆடவரும், 38 வயது சீன நாட்டவரும் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்பில், 30 வயது மலேசிய மாது ஒருவரும், 34 வயது வியட்னாமிய ஆடவரும், 41 வயது சிங்கப்பூரரும் விசாரணையில் உதவி வருகின்றனர்.

பீர் வகை பானம் மொத்தம் 2,460 கேன்கள், 6,468 போத்தல்கள் ஆகியவற்றில் பிடிபட்டன. மேலும் 320 போத்தல்களில் லிக்கர் எனப்படும் அதிக மது கலந்த பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பொருள்கள், சேவை வரியின் மதிப்பு

அவை அனைத்துக்குமான மொத்த பொருள்கள், சேவை வரி (ஜிஎஸ்டி) $19,791 என்று சுங்கத் துறை குறிப்பிட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், செலுத்தத் தவறிய வரியைவிட 40 மடங்கு அபராதமும் ஆறு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்