யுஓபி வங்கி வழங்கும் உதவித் திட்டம் மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 120,000க்கும் மேற்பட்ட சிறாரும் மாணவர்களும் கல்வி சார்ந்த உதவிகளைப் பெறுவர்.
இவர்களுக்காக யுஓபி வங்கி $30 மில்லியன் நிதி வழங்குகிறது.
இந்நிதி மின்னிலக்கக் கற்றல் சாதனங்கள், நிதி உதவி, உபகாரச்சம்பளங்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
யுஓபியின் 90வது ஆண்டு விழாவை முன்னிட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நான்கு முக்கிய திட்டங்கள் வாயிலாக தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள வசதி குறைந்த சிறுவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என்று யுஓபி வங்கி திங்கட்கிழமை (மார்ச் 3) தெரிவித்தது.
அவற்றில் ஒன்று, இந்தோனீசியா மற்றும் வியட்னாமில் உள்ள 90,000 வசதி குறைந்த சிறுவர்களுக்கு ஆதரவு வழங்கும்.
கல்வித் தொழில்நுட்பம் சார்ந்த தளத்துடன் யுஓபி வங்கி இணைந்து செயல்பட்டு வருவதால் இச்சிறுவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தளம் வாயிலாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் கணினிக் குறியீடு, கணினிப் பயிற்சி, மின்னிலக்கத் திறன் ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையான வளங்கள் இச்சிறுவர்களால் பெற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
தி யுஓபி மை டிஜிட்டல் ஸ்பேஸ் திட்டம் மூலம் தென்கிழக்காசியாவில் உள்ள மேலும் 20,000 சிறுவர்களுக்கு மின்னிலக்கத் திறன் கற்றுத் தரப்படும்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைகாசு நிதி மூலம் சிங்கப்பூரில் வசதி குறைந்த 11,000 மாணவர்களுக்கு உதவி வழங்கப்படும்.
அந்த மாணவர்களுக்கு 90 நாள்களுக்கு கைகாசு தரப்படும்.
அதை அவர்கள் உணவு, போக்குவரத்து, பள்ளி நடவடிக்கைகள் போன்ற பள்ளி சார்ந்த செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
இந்த நிதி பள்ளி சார்ந்த செலவுகளுக்கு மட்டுமின்றி மாணவர்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்கும் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கல்வி பயில அடுத்த சில ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 90 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு முந்தைய கல்விக்கான உபகாரச்சம்பளம் வழங்கப்படும் என்று யுஓபி தெரிவித்தது.
இதை அவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்துக்கும் அன்றாடச் செலவுக்கும் பயன்படுத்தலாம்.
கடந்த 90 ஆண்டுகளாக அனைத்து பங்குதாரர்களின் ஆதரவுடன் யுஓபி வங்கி வெற்றி நடை போட்டு வருவதாக அந்த வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீ யீ சியோங் கூறினார்.
இந்நிலையில், ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள தனது பிரதானக் கிளையில் யுஓபி காட்சிக்கூடம் ஒன்றை யுஓபி வங்கி திறந்துள்ளது.