சில்லறை வர்த்தகத் துறைக்கான புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்கத் திட்டம் அறிமுகம்

சில்லறை வர்த்தகத் துறைக்கான புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்கத் திட்டம் அறிமுகம்

2 mins read
0fd2c422-67e1-4d44-b17d-f8c5a813d719
வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் சில்லறை வர்த்தக மறுவடிவமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்கத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். - படம்: என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு

செயற்கை நுண்ணறிவைப் (எஐ) பயன்படுத்த வர்த்தகங்களுக்கு உதவவும் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளுக்கு மத்தியில் உற்பத்தித்திறனை வலுப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் துறை மின்னிலக்கத் திட்டம் செவ்வாய்க்கிழமை (மே 26) அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்மூலம் 2,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் சில்லறை வர்த்தக மறுவடிவமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

“செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக வளர்ந்து வரும் வேளையில், சில்லறை வர்த்தகத் துறையைத் துடிப்பானதாகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் எதிர்காலத்துக்குத் தயாரானதாகவும் மாற்றுவதே இலக்கு,” என்று திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்க வரைவுத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

பல சிறிய நிறுவனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவை வணிகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்ற தெளிவு இல்லாததால், இந்தத் தொழில்நுட்பங்கள் எங்கு, எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திட்டம் சில்லறை வர்த்தகர்களுக்கு வழிகாட்டும்.

முன்பு மின்னிலக்கத் தயார்நிலையின் அடிப்படையில் தீர்வுகள் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது, வர்த்தகர்கள் தங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் உள்ள குறிப்பிட்ட குறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உகந்த தீர்வுகளை எளிதாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த செயல்பாட்டு முறையின்கீழ் தீர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டில், மின்னிலக்கத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்திய பத்தில் ஒன்பது சில்லறை வர்த்தக நிறுவனங்கள், அவற்றின் செயல்பாட்டுச் செலவுகள் குறைந்து, சந்தைப் பங்கும் வருவாயும் அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளன.

வர்த்தகர்கள் தங்களது தனிப்பட்ட சவால்களுக்குப் பொருத்தமான மின்னிலக்கத் தீர்வுகளைக் கண்டறிய புதுப்பிக்கப்பட்ட திட்டம் பெரிதும் உதவும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவர்த்தகம்மின்னிலக்கம்