நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட செயலி

1 mins read
07207c8b-a0ec-42fb-8e94-9e87511f7612
பயனாளர்கள் இப்போது தாங்கள் செல்லும் இடத்தை உள்ளீடு செய்து, தங்களின் பயணத் தெரிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேருந்து, ரயில் மூலம் தங்கள் பயணங்களைத் திட்டமிட விரும்பும் பயணிகள் எளிதாகத் தகவல்களைப் பெறும் நோக்கில் ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ (MyTransport.SG) கைப்பேசிச் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

அந்தச் செயலியைத் தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்ததும், ஆக அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களையும் பேருந்து வந்துசேரும் நேரங்களையும் பயணிகள் பார்க்கலாம். அதோடு, அருகில் உள்ள ரயில் நிலையங்களிலும் இலகு ரயில் நிலையங்களிலும் உள்ள கூட்ட நெரிசல் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நவம்பரில் செயலி மேம்படுத்தப்பட்ட பிறகு, பயனாளர்கள் தாங்கள் செல்லும் இடத்தை உள்ளீடு செய்து, தங்களின் பயணத் தெரிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அவை, பேருந்து, ரயில் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.

செயலியில் ஒரு நிலையத்தைச் சொடுக்கினால், மற்றப் பயனுள்ள தகவல்களையும் காணலாம். ரயில்களுக்கான அட்டவணை, நிலையங்களின் வெளிவழிகள் அமைந்துள்ள இடங்கள், மேற்கொள்ளப்படும் மின்தூக்கிப் பராமரிப்புப் பணிகள் போன்றவை அவற்றுள் அடங்கும்.

மேம்பாட்டிற்கு முன்பாகவே செயலியில் இந்த அம்சங்கள் இருந்தாலும், பேருந்தில் காலி இருக்கைகள், நிலையங்களில் மக்கள் கூட்டம் போன்ற தகவல்களை பயனாளர்களால் எளிதில் பெற முடியவில்லை.

இருப்பினும், செயலியில் இத்தகைய தகவல்களைத் தெரிவிப்பதற்கு இடம் ஒதுக்க, மின்னியல் சாலைக் கட்டணங்கள், போக்குவரத்துக் கண்காணிப்புக் கருவிகளிலிருந்து காட்டப்படும் படங்கள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இந்தக் கைப்பேசிச் செயலியின் ஆக அண்மைய மேம்பாட்டை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்