மேம்பாடு காணும் சிங்கப்பூர்க் கலைத்துறை

2 mins read
47d3a961-2899-40c3-b660-40295a6c9ead
தேசியக் கலை மன்றம், 5 சமூக மேம்பாட்டு மன்றங்கள், மக்கள் கழகம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30), சுவா சூ காங்க் சாஃப்ரா வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துணைப் பிரதமர் கான் கிம் யோங் (நடுவில்). - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

சிங்கப்பூர்க் குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சிகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் வரை இரட்டிப்பாகும்.

மேம்பாடு காணும் ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ (ArtsEverywhere@CDC) திட்டத்தின்கீழ், 200க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் படைக்கப்படும்.

அவற்றை 80க்கு மேற்பட்ட கலைஞர்களும் கலைக் குழுவினரும் படைக்கவுள்ளனர். 

இந்தப் புதிய முயற்சி ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசியக் கலை மன்றம், 5 சமூக மேம்பாட்டு மன்றங்கள், மக்கள் கழகம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30), சுவா சூ காங்க் சாஃப்ரா வளாகத்தில் ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் இருவரும் கலந்துகொண்டனர். 

சிங்கப்பூர் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ மூன்றாக விரிவடையும் என்று தெரிவித்தார் துணைப் பிரதமர் கான் கிம் யோங். 

பார்வையாளர்கள் ரசித்து மகிழ கலை நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், படைக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை ஆகியவை கூடும் என்றார் அவர்.  

“குடியிருப்பாளர்கள் கலைகளை அதிகமாக அணுகுவதற்கும் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவும்,” என்றார் துணைப் பிரதமர். 

ஜூலை மாதம் 2024ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ திட்டத்தில் 40,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரங்களில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரம்மாஸ்திரா உள்ளூர் இசைக்குழுவினர் படைத்த இசை நிகழ்ச்சி, கலைஞர்களின் நடனம் எனப் பல அங்கங்கள் மக்களை மகிழ்வித்தன. 

உட்லண்ட்ஸ் வட்டாரவாசியான சங்கரி, 32, தன் கணவரின் பரதநாட்டியத்தைக் காண சாஃப்ரா வளாகத்துக்கு வந்திருந்தார். 

தன் கணவரின் கலை ஈடுபாட்டின் மூலம் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்த அவர் அதன் மேம்பாட்டைப் பெரிதும் பாரட்டினார். 

“கலைகள் மூலம் சிங்கப்பூரின் பல இனக் கலாசாரத்தைக் குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க முடியும்,” என்றார் சங்கரி. 

‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ முன்முயற்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூடுதல் தகவல்கள் பெற Catch.sg இணையப்பக்கத்தை நாடலாம். 

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பல தொகுதிகளில் குடியிருப்பளர்களை சந்தித்து வரும் வேளையில், மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்கள் இருவரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணமுடிந்தது.

குறிப்புச் சொற்கள்