சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குரிய அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் நான்கு குடியிருப்பு நிலப் பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வெளியிட்டு உள்ளன.
உட்லண்ட்ஸ் டிரைவ் 17ல் கட்டப்பட இருக்கும் எக்சகியூட்டிவ் கொண்டோமினியம், லெண்டோர் கார்டன்ஸில் உள்ள குடியிருப்பு வட்டார மனை ஆகியனவும் அந்தப் பட்டியலில் அடங்கும்.
தரைப்பகுதி வர்த்தகத்திற்கும் முதல் தளம் குடியிருப்புக்கும் கட்டப்பட இருக்கும் மரினா கார்டன்ஸ் லேன் மற்றும் ரிவர் வேலி கிரீன் (பார்சல் பி) ஆகியன அந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ள எஞ்சிய இரு நிலப் பகுதிகள்.
அவற்றில் லெண்டோர் கார்டன்ஸ் மற்றும் ரிவர் வேலி கார்டன்ஸ் பகுதிகளின் காலி மனைகள் உறுதிசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் விற்பனைக்கு விடப்பட்டவை.
லெண்டோர் கார்டன்ஸ் நிலப்பகுதியில் 500 வீடுகளும் ரிவர் வேலி கார்டன்ஸில் 474 வீடுகளும் கட்டுவதற்கான சாத்தியம் உள்ளது.
2024 இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் உறுதிசெய்யப்பட்ட பட்டியல் வாயிலாக வெளியிடுவதற்கு ஒதுக்கப்பட்ட 5,050 வீடுகளின் ஒரு பகுதி அவை.
இருப்பினும், மரினா கார்டன்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் டிரைவ் 17ல் அமைந்துள்ள காலி மனைகள், முன்பதிவு செய்யப்பட்ட பட்டியலின்கீழ் விண்ணப்பம் செய்வதற்கு உரியவை.
அவற்றில் மரினா கார்டன்ஸ் நிலப்பகுதியில் 390 வீடுகளும் உட்லண்ட்ஸ் டிரைவ் 17ல் 420 எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளும் கட்டப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
வரவிருக்கும் அரசாங்க நில விற்பனைத் திட்டத்தில் அமைய இருக்கும் தனியார் வீடுகளின் நிலையான விநியோகத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
ரிவர் வேலி கிரீன் (பார்சல் பி) நிலப் பகுதிக்கான ஏலக்குத்தகை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நண்பகல் வரை நடைபெறும் என்றும் லெண்டோர் கார்டன்ஸ் நிலப்பகுதிக்கான ஏலக்குத்தகை ஏப்ரல் 3ஆம் தேதி நண்பகலில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான்கு நிலப் பகுதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழக இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அரசாங்க நில விற்பனைத் திட்டம் என்பது சந்தையின் நிலத்தன்மையை நிர்வகிக்கவும் வீடமைப்புக்கான தேவையைச் சமாளிக்கவும் கைகொடுக்கக்கூடியது.

