சீனப் புத்தாண்டு விழாக்காலம் நெருங்குவதால் ஊழியர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதோடு பாதுகாப்புக்கான அவகாச காலத்தையும் கடைப்பிடிக்குமாறு நிறுவனங்களை மனிதவள அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 12) தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அவகாசம் வழங்குவது குறித்து நிறுவனங்கள் சொந்தமாக முன்வருமாறு அதில் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில வேலைகளில் இருந்து சிறிது விலகி எடுப்பது பாதுகாப்பு அவகாச காலமாக் கருதப்படுகிறது. குறிப்பாக, வேலையிடச் சம்பவங்கள் அதிகமாக இருக்கும்போதும் அபாயமான சூழலிலும் அந்த நடைமுறை பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
அந்த வகையில், ஜனவரி 13 முதல் ஜனவரி 27 வரை பாதுகாப்புக்கான காலமாக எடுத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது.
அந்த அவகாசம் கனரக வாகனங்களுக்கு மட்டுமல்லாது, ஃபோர்க்லிஃப்ட், நடமாடும் நடைமேடை போன்ற வேலையிடத்தில் உள்ள இதர வாகனங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வேலையிடத்தில் வாகனங்கள் தொடர்பான நான்கு மரணங்கள் நிகழ்ந்ததாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் என்னும் முத்தரப்புக் கூட்டணி தெரிவித்தது.
அந்த மரணங்கள் வெவ்வேறு வாகனங்கள் தொடர்பானவை என்றும் அது கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வேலையிடத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய நான்கு அம்சங்களைப் பின்பற்றுமாறு நிறுவனங்களை மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

