சிங்கப்பூர் நிறுவனங்கள், முக்கியமான ‘பிஎச்பி’ பாதிப்புகள் குறித்து அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

சிங்கப்பூர் நிறுவனங்கள், முக்கியமான ‘பிஎச்பி’ பாதிப்புகள் குறித்து அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

படம்: ராய்ட்டர்ஸ்

22 Oct 2026 - 7:39 pm

2 mins read

பரவலாகப் பயன்படுத்தப்படும் பிஎச்பி (PHP) நிரலாக்க மொழியில் முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அதன் உருவாக்குநர்கள் அக்டோபர் 21ஆம் தேதியன்று அவசரப் பாதுகாப்புப் பிழைத்திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.

PHP2Shell (CVE-2026-109618 மற்றும் CVE-2026-109619) எனக் கூட்டாக அறியப்படும் இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கண்டறியப்படுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக இந்த நிரலாக்க மொழியில் மறைந்திருந்ததாக அந்த மென்பொருளின் உருவாக்குநர்கள் கூறுகின்றனர்.

இவை, தாக்குதல் நடத்துபவர்கள் உள்நுழைவுச் சான்றுகள் தேவையின்றி பாதிக்கப்பட்ட கணினிகளில் ஊடுருவவும், இணையச் சேவையகங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்கவும், தரவைத் திருடவும் அல்லது சேவைகளைச் சீர்குலைக்கவும் வழிவகுக்கக்கூடும்.

பிஎச்பி என்பது இணையத்தளங்கள், இணையச் சேவைகளை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நிரலாக்க மொழியாகும். WordPress, Drupal, Joomla போன்ற தளங்களில் உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் உட்பட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பார்வையாளர் ஒரு பக்கத்தைத் திறக்கும்போது, ​​பிஎச்பியை இயக்கும் ஒரு சேவையகம் உள்ளடக்கத்தை ஒருங்கிணைத்து உலாவிக்கு அனுப்புகிறது. இது தன்னார்வலர்களால் பராமரிக்கப்படும் ஓர் இலவச, திறந்த மூல மென்பொருளாகும்.

சில ஊடுருவிகள் ஏற்கெனவே இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்சரித்து வருவதாலும், ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்க அமைப்புகள் முன்னெச்சரிக்கையாகத் தங்கள் தளங்களை இணையத்திலிருந்து நீக்கி வருவதாலும், சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ) வியாழக்கிழமையன்று (அக்டோபர் 22) ஓர் அவசர ஆலோசனையை வெளியிட்டது.

ஒரு லிங்க்ட்இன் பதிவில், சிஎஸ்ஏ தலைமை நிர்வாகியும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையருமான குவெண்டாஃபாங், இந்தக் குறைபாடுகளைக் ‘குறிப்பாகக் கவலைக்குரியவை’ என்று வர்ணித்தார்.

“அச்சுறுத்தல் உடனடியானது. செயல்படும் சுரண்டல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்டோபர் 21ஆம் தேதி பாதுகாப்புப் பிழைத்திருத்தங்கள் வெளியிடப்பட்டன. தாக்குபவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பு, பாதிக்கப்படக்கூடிய அமைப்புகளைக் கண்டறிந்து சரிசெய்வதே இப்போது முன்னுரிமையாகும்,” என்று அவர் பதிவிட்டார்.

மென்பொருள் குறைபாடுகளைச் சரிசெய்யும் பணிகளை விரைவுபடுத்த, சிங்கப்பூர் அரசு அமைப்புகள், முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்கள், பெரிய நிறுவனங்கள், தொழில்துறை பங்காளிகளுடன் சிஎஸ்ஏ இணைந்து செயல்பட்டு வருகிறது.

சிறிய நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவும் வகையில், வர்த்தகச் சங்கங்கள், இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநர்கள், தொழில்நுட்பப் பங்காளிகளுடனும் சிஎஸ்ஏ தொடர்புகொண்டு வருகிறது.

வெளிப்புறத் தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள், இணையச் சேவை வழங்குநர்களைச் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள், குறிப்பாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தங்கள் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று திருவாட்டி ஃபாங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இணையப் பாதுகாப்புசிங்கப்பூர்ஊடுருவல்