அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி: பணக்கார முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் பங்குகளில் கவனம்

2 mins read
f1bb78eb-8949-444d-a826-7d35f8bb5973
சிங்கப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் சிங்கப்பூர் வங்கியின் தலைமையகத்தில் வங்கியின் சின்னம். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க டாலரின் வலுவிழப்புக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் நோக்கில், பணக்கார முதலீட்டாளர்களும் குடும்ப அலுவலகங்களும் சிங்கப்பூர் வெள்ளி சொத்துகளில் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக, பேங்க் ஆஃப் சிங்கப்பூரில் விருப்பத்தின் பேரில் நிர்வகிக்கப்படும் சிங்கப்பூர் வெள்ளி சொத்துகளுக்கான ஒதுக்கீடுகள் 2025ல் ஆண்டு அடிப்படையில் இருமடங்காக அதிகரித்துள்ளன.

இது, சிங்கப்பூரை மையமாகக் கொண்ட முதலீட்டு ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைக் குறிக்கிறது.

சிங்கப்பூர் சார்ந்த முதலீட்டு ஒதுக்கீடுகளின் வளர்ச்சி வழக்கமாக ஒற்றை இலக்க விழுக்காட்டிலேயே இருக்கும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, சாதாரண வளர்ச்சி வேகத்தைவிட அதிகமாக உள்ளது.

ஓசிபிசி வங்கியின் தனியார் வங்கிப் பிரிவான பேங்க் ஆஃப் சிங்கப்பூர் புதன்கிழமை (ஜனவரி 7) வெளியிட்ட தகவலின்படி, அதன் ஒட்டுமொத்த விருப்பப்படியான முதலீட்டுத் தொகுப்பு மேலாண்மை சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூரை மையமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துகள், வங்கியின் ஒட்டுமொத்த சொத்து வளர்ச்சியைவிட அதிவேகமாக வளர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடுகளின் ஒரு பகுதியாக, பொதுவாக 40 முதல் 95 விழுக்காடு வரை சிங்கப்பூர் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள பத்திரங்களிலும் ரொக்கத்திலும் முதலீடு செய்யப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக, சீனா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், அமெரிக்க டாலரில் முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு, மற்ற சொத்துகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிஸ்னஸ் டைம்சிடம் பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜீன் சியா கூறினார்.

கடந்த ஓராண்டாக சிங்கப்பூர் நாணயத்துக்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு 6 விழுக்காட்டுக்குமேல் சரிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்