வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்று அதன் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.
கடன் செலவுகளைக் குறைக்க ஏதுவாக வட்டி விகிதத்தைக் குறைக்கும்படி அதிபர் டோனல்ட் டிரம்ப் நெருக்குதல் அளித்தபோதும் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை நிலையாக வைத்துள்ளது.
கடன் செலவுகள் செப்டம்பர் மாதத்திலிருந்து குறையத் தொடங்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய வங்கியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி கவனம் செலுத்துவதாகத் திரு பவல் கூறினார். திரு டிரம்ப் வலியுறுத்துவதுபோல் அரசாங்கக் கடன் செலவுகளிலோ வீட்டுக் கடன் கட்டணத்திலோ மத்திய வங்கி கவனம் செலுத்தவில்லை என்றார் அவர்.
மேலும், அதிபர் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகளாலும் இதர கொள்கைகளாலும் ஏற்படக்கூடிய விலைவாசி உயர்வின் நெருக்குதல்களை அவர் சுட்டினார். எனவே கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்படும்வரை மத்திய வங்கி அதன் பிடியைத் தளர்த்த இயலாது என்று திரு பவல் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் அடுத்த கூட்டம், செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் நடைபெறும். அதிபர் டிரம்ப்பின் திருத்தியமைக்கப்பட்ட இறக்குமதி வரிகளும் இதர கொள்கை மாற்றங்களும் பணவீக்கம், வேலை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்றார் திரு பவல்.
இந்த முடிவின்கீழ், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 விழுக்காட்டிற்கும் 4.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும். கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் முதல் இந்த விகிதம் நிலையாக உள்ளது.
இருப்பினும் 30 ஆண்டுகளில் முதல் முறையாக, வங்கியின் இயக்குநர் வாரிய உறுப்பினர்கள் இருவர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். வட்டி விகிதத்தைக் குறைக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதக் குறைப்புக்கான ஆதரவு பரவலாகிவருவதை இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நாணயக் கொள்கை தொடர்பில் தற்போதைக்கு எந்த உறுதியான முடிவும் எடுக்க இயலாது என்று திரு பவல் கூறியுள்ளார்.
அவர் அண்மைய மத்திய வங்கிச் சந்திப்பில் வட்டி விகிதத்தைக் குறைக்காதது குறித்து அதிபர் டிரம்ப் திரு பவலைச் சாடியுள்ளார்.
இதற்கிடையே இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிடச் சிறப்பாக மீட்சிகண்டதாக அந்நாட்டு வர்த்தகத் துறை புதன்கிழமை (ஜூலை 30) தெரிவித்துள்ளது.

