சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோவிடம் தெரியப்படுத்தினார்.
வரிவிதிப்பும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளும் சிங்கப்பூரைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் அல்ல என்று திரு ருபியோ கூறியுள்ளார்.
“எனினும், சிங்கப்பூருக்கு மறைமுகமான பாதிப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள அடுத்த சில மாதங்களில் நிறைய வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால், வரும் மாதங்களில் நாங்கள் தொடர்ந்து (அமெரிக்க) அரசாங்கத்துடன் மிகவும் அணுக்கமாகத் தொடர்பில் இருக்கவேண்டும்,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன், புதன்கிழமை (ஜூன் 4) திரு ருபியோவைச் சந்தித்த பிறகு அறிக்கையில் தெரிவித்தார். டாக்டர் பாலகிருஷ்ணன், வாஷிங்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரும் திரு ருபியோவும் இருதரப்பு உறவு, அனைத்துலக நிகழ்வுகள் ஆகியவற்றின் தொடர்பில் குறிப்பிடத்தக்க, விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மருந்துப் பொருள்களுக்கு சிங்கப்பூருக்கு சாதகமான வகையில் வரிவிதிக்கப்படலாம் அல்லது அறவே வரி இல்லாமல் இருக்கலாம் என்ற சாத்தியம் இருப்பதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் முன்னதாக கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
அமெரிக்க வரிவிதிப்பானது சிங்கப்பூரை ஏற்கெனவே மறைமுகமாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த மே மாதம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக சிங்கப்பூரின் ஆலை நடவடிக்கை சுருங்கியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை, உலகப் பொருளியல் நிலவரம் குறித்துப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.
திரு டிரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதத் தொடக்கத்தில் அது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அலுமினியம், எஃகு பொருள் இறக்குமதிகளுக்கான வரியை 25 விழுக்காட்டிலிருந்து உயர்த்தப்போவதாக திரு டிரம்ப் அறிவித்திருந்தார். அதற்கான உத்தரவில் அவர் புதன்கிழமை கையெழுத்திட்டார்.

