சிங்கப்பூர் மீதான அமெரிக்க வரிகளில் மாற்றம் இருக்காது: வல்லுநர் நம்பிக்கை

சிங்கப்பூர் மீதான அமெரிக்க வரிகளில் மாற்றம் இருக்காது: வல்லுநர் நம்பிக்கை

2 mins read
27ec4c5d-a7c4-4c5c-9122-0ab289fd7e27
சிங்கப்பூர் ஏற்கனவே 10 விழுக்காடு வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், புதிய வரி விதிப்பு தற்போது நிலவும் சூழல்களை மாற்றாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹூஸ்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள 10 விழுக்காடு உலகளாவிய வரி விதிப்பால்  சிங்கப்பூர் மீதான அமெரிக்க வரிகள் மாறாமல் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவசரகாலப் பொருளியல் அதிகாரச் சட்டத்தின்கீழ்  வரிகளை தன்னிச்சையாக விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு  வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தீர்ப்பு வழங்கியது.

அந்த அமா்வில் இடம்பெற்றவர்களில் 6 நீதிபதிகள்,  ‘‘அமெரிக்க அரசியல் சாசனம் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திடம் தான் ஒப்படைத்துள்ளது;

‘‘அந்த அதிகாரத்தை அரசின் நிர்வாகப் பிரிவுக்குத் தரவில்லை. எனவே  டிரம்ப் நிர்வாகம் சுமத்திய வரி விதிப்புகள் செல்லாது,’’ என்று தீர்ப்பு வழங்கினர்.

எனினும், அதே அமர்வில் இடம்பெற்றிருந்த மற்ற 3  நீதிபதிகள், ‘‘வரலாற்றைப் பார்த்து கடந்த கால, முடிவுகளைக் கருத்தில் கொண்டால், டிரம்ப் நிர்வாகம் அறிவித்த வரி விதிப்புகள் சட்டபூா்வமானவை.

அவை அறிவார்ந்த கொள்கையாக உள்ளதா இல்லையா? என்பதை தற்போது கவனத்தில் கொள்வதற்கான தேவை இல்லை,’’ என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று நீதிபதிகள் அறுவர் அளித்த தீா்ப்பு வெளியானது.

இந்நிலையில்தான், அதிபர் டிரம்ப் மீண்டும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகள் மீது 10 விழுக்காடு வரிகள் விதிக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பொருள்வரி குறித்த முழு விவரங்களை வெள்ளை மாளிகை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்தப் புதிய வரியால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கம் குறித்து கருத்துரைத்தார் அமெரிக்க வர்த்தக வல்லுநரும், ஆசிய சமூக கொள்கைக் கழகத்தின் துணைத் தலைவருமான திருவாட்டி வெண்டி கட்லர். 

“சிங்கப்பூர் ஏற்கனவே 10 விழுக்காடு வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், வரிச் சார்ந்த சூழல்கள் நிலையானதாக நீடிக்கக்கூடும்,’’ என்று  தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

சிங்கப்பூர் பொருள்களுக்கான அடிப்படை வரிகளைத் தவிர, மருந்துகள் மற்றும் பகுதிமின்கடத்திகள் போன்ற சில துறைகளுக்கு வெவ்வேறு வரி விதிப்புகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்காவிற்கு அதிக அளவிலான பகுதி மின்கடத்திகளை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் சுமார் 75 விழுக்காடு தரவு மையங்கள்  ஆராய்ச்சி, நுகர்வோர் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அவற்றுக்கு அமெரிக்காவில் அதிக வரிகள் விதிக்கப்படுவதில்லை. 

சிங்கப்பூரின் மருந்து நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு விற்கப்படும் தங்களின் பிராண்டட் மருந்துகளுக்கு 100% என்றளவிலான மிகப்பெரிய வரியை எதிர்கொள்கின்றன.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தபோதும், அவை நடைமுறையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்