அமெரிக்காவின் போக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: லீ

2 mins read
c5fa49a7-7dad-486b-baf0-6ac94f75a072
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் சிறப்புக் கலந்துரையாடல், பேராசிரியர் சான் ஹெங் சீயால் வழிநடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ராணுவ நடவடிக்கை உள்பட பிறநாட்டின் விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் அமெரிக்காவால், பேரளவிலான புவிசார் தாக்கம் ஏற்படக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.

தென்கிழக்காசிய ஆய்வுக் ­க­ழ­கத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 8) நடைபெற்ற கல்வியாளர் மன்றத்தில் பங்கேற்ற மூத்த அமைச்சர், அனைத்துலக அரங்கில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினார்.

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு அனைத்துலகச் சட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது என்பதால் சிங்கப்பூர் ‘மிகுந்த கவலை’ கொண்டுள்ளது எனத் தெரிவித்தார் மூத்த அமைச்சர்.

அப்போது தமது உரையில், வெனிசுவேலாவில் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை அற்புதமான வெற்றியாகத் தோன்றலாம்; ஆனால் அதன் நீண்டகாலத் தாக்கம் அக்கறைக்குரியது என்று கூறினார் திரு லீ.

உள்ளூர், வெளிநாட்டு அதிகாரிகள், சட்டத்துறை வல்லுநர்கள், இதர விருந்தினர்கள் என ஏறத்தாழ 650 பங்கேற்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய திரு லீ, வெனிசுவேலா சிக்கலான பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம்; அதேபோலப் போதைப்பொருள், அகதிகள் சார்ந்த பிரச்சினைகளால் அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் தாக்கம் இருக்கலாம்.

எனினும், ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது, எந்தவொரு முறையான அங்கீகாரமும் இல்லாமல் மேற்கொள்ளும் ராணுவத் தலையீட்டை அந்தச் சூழல்கள் நியாயப்படுத்தாது என்று திரு லீ கூறினார்.

‘‘இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் நீண்டகாலத் தாக்கம் அனைத்துலக அமைப்பில் இருக்கும். அது நாம் கவலை கொள்ளக்கூடிய விஷயம் என்று கருதுகிறேன். இவ்வழியில் உலகம் இயங்கினால், ஒரு சிறிய நாடாக நாம் அதை நோக்கும்போது, இத்தகைய போக்கு வருத்தத்திற்குரியது,’’ என்றார் மூத்த அமைச்சர்.

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீடு குறித்து சிங்கப்பூர், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகின்றன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஜனவரி 4ஆம் தேதி அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டதும் நினைவுகூரத்தக்கது.

அந்த அறிக்கையில் “உலக நாடுகளின், குறிப்பாகச் சிறிய நாடுகளின் சுதந்திரம், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் அனைத்துலகச் சட்டத்தையும் ஐக்கிய நாட்டுச் சாசனத்தின் கொள்கைகளையும் மதித்து நடக்கும் நாடு சிங்கப்பூர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்