அமெரிக்கா, சீனா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தலையாட்டிப் பொம்மையாகச் சிங்கப்பூர் செயல்பட்டால் உலக மேடையில் எந்நாடும் சிங்கப்பூருக்குச் செவிசாய்க்காது என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் எச்சரித்துள்ளார்.
“சிங்கப்பூரின் சிறப்பு, அது ஒரு நேர்மையான இடையீட்டாளர் என்பதே. நமக்கென ஒரு கருத்து உள்ளது. ஆசியானிலும் ஐக்கிய நாட்டு நிறுவனத்திலும் அக்கருத்துக்கு மதிப்புண்டு. சிறிய நாடாக இருப்பினும், சிங்கப்பூரின் கருத்துகளுக்கு மற்ற நாடுகள் செவிமடுக்கின்றன.
“நாம் ஒரு நாட்டுடனே இணங்கிப்போனால், பிறர் நமக்குச் செவிசாய்க்க வேண்டிய தேவை என்ன? அப்போது நம்மால் என்ன பங்காற்ற முடியும்? இந்தோனீசியா போல அதிக இயற்கை வளங்களும் நம்மிடத்தில் இல்லை. இந்நிலையில், அமெரிக்கா, சீனா நாடுகளில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஒருபக்கம் சாய்ந்தால் நமக்கும் அவற்றுக்கும் அர்த்தமில்லை,” என்றார் அமைச்சர் சண்முகம்.
“சீனா - அமெரிக்கா இடையே உறவுகள் முறிந்துபோகும்போதுதான் அவை தம்மில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும். ஆனால், அந்நிலை வந்தால் எப்படியிருந்தாலும் பெரும்பிரச்சினையே,” என்றார் அமைச்சர் சண்முகம்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ், பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ்கள் இணைந்து நாலாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருக்கும் ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2025’ன் இரண்டாம் நாள் (அக்டோபர் 9) காலையில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அமைச்சர் சண்முகம்.
அமைச்சர் சண்முகத்துடன் ‘நண்பர்கள், பிளவுகள்: கொந்தளிப்பான உலகில் அனைத்துலக உறவுகளைக் காப்பதில் சவால்கள்’ எனும் கலந்துரையாடலை வழிநடத்தினார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜேமி ஹோ.
“அமெரிக்காதான் நம் ஆகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர். அமெரிக்கா கிட்டத்தட்ட $500 பில்லியனை இங்கு முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூரில் 6,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. நம் ராணுவப் பாதுகாப்பும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது.
“அதே நேரத்தில், தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாகச் சீனாதான் நம் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வந்துள்ளது,” என்று திரு சண்முகம் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனால், ஒரு தரப்பையே சார்ந்திருப்பது எந்தக் கண் முக்கியம் எனத் தேர்ந்தெடுப்பது போன்றது என அவர் கூறினார்.
2020லும் 2023லும் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வுகள்படி, அமெரிக்காவைவிட சீனா பற்றிச் சிங்கப்பூர் மக்களுக்கு நல்லெண்ணம் இருப்பதையும் அமைச்சர் சண்முகம் சுட்டினார்.
“40 ஆண்டுகளில் சீனா 900 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது; அதன் கட்டமைப்புகள், தொழில்நுட்பம், அறிவியல் அனைத்தும் பேரளவில் முன்னேறியுள்ளன.
“பல வணிகர்களும், ‘நாம் ஏன் சீனாவுக்குச் சாதகமாகக் கொள்கைகள் வகுக்கவில்லை’ என்பது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால், சில சமயம் நம் முன்னுரிமைகள் வேறு. நம் தலையாய அடையாளம் சிங்கப்பூரர் என்பதே,” என்றார் அமைச்சர் சண்முகம்.
அதிகரிக்கும் மக்கள்தொகை
சிங்கப்பூரின் மக்கள்தொகை 6.11 மில்லியனை எட்டியுள்ள நிலையில், அதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, “எத்தனை வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கின்றனர் என்பது பற்றி சிங்கப்பூரர்கள் அதிக அக்கறை கொள்வதில்லை. குடிமக்கள் எத்தனை பேர், எத்தனை நிரந்தரவாசிகள் இங்குள்ள வசதிகளைப் பகிர்கின்றனர் என்பதே.
“பத்து ஆண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் நம் குடிமக்கள், நிரந்தரவாசி எண்ணிக்கையில் அவ்வளவு மாற்றம் இல்லை. இன்று பல வர்த்தகங்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்கின்றனர். ஆயினும், நாம் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பை நிர்வகிக்க முயலவேண்டும். அதே சமயம் ‘பிஎஸ்ஏ’ திட்டங்கள், ரயில் சேவைகள், வீவக வீடுகள் எனப் பெரிய திட்டங்களும் உள்ளன. அவற்றை யார் செய்வர்?” என்றார் அமைச்சர் சண்முகம்.
வரவேற்புரையாற்றிய எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாகி சான் யெங் கிட், “ஒவ்வொரு சிக்கலிலும் தோற்பவர்களும் வெல்பவர்களும் உண்டு. புதிய உலக நியதியில் பழைய உத்திகளைக் கைவிட்டு புதிய, துணிவான உத்திகளைக் கையாள வாய்ப்பாக உள்ளது,” என்றார்.