ஆட்கடத்தல், மோசடி போன்ற குற்றச் செயல்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கருவிகள் பயன்படுத்தப்படுவதாக இன்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் திருவாட்டி ஸ்டெஃபனி பரூத் கூறியுள்ளார்.
மோசடிகள் தொடர தொழில்நுட்ப முன்னேற்றம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து செப்டம்பர் 29ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த காணொளி நேர்காணலில் இன்டர்போல் அமைப்பின் ஆட்கடத்தல், புலம்பெயர்வோரைக் கடத்துவது தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளாரான ஸ்டெஃபனி பரூத் விவரித்தார்.
மக்களை ஏமாற்றுவதற்கு நம்பத் தகுந்த வழிமுறைகளை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை மோசடிக் கும்பல்கள் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
‘ஏஐ’ உதவியுடன் உருவாக்கப்படும் போலி வேலை விளம்பரங்களைச் சட்டபூர்வமான வேலையென நம்பிச் சேரும் சிலர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாக, போலி வேலை விளம்பரங்களில் மொழித் தவறு அல்லது அறியப்பட்ட ஆட்கடத்தல் மையத்துடன் பொருந்தக்கூடிய வேலையிடம் போன்ற பல அறிகுறிகள் இருக்கும். போலி என்பதைக் கண்டுபிடிப்பதை செயற்கை நுண்ணறிவு கடினமாக்கியுள்ளது என்றார் ஸ்டெஃபனி பரூத்.
காதல் மோசடிகளில் இனிமையாகப் பேசுவது, மோசடி இல்லை என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்வது என்று பாதிக்கப்பட்டவர்களின் தற்காப்பு உணர்வைத் தகர்க்கவும் ‘ஏஐ’ பயன்படுத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அனைத்துலக அளவில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பலர் போலி வேலை விளம்பரங்களால் தொடர்ந்து ஏமாறுகின்றனர். ஆட்கடத்தலுக்கு உதவும் வேலை பற்றாக்குறை போன்ற காரணிகள் தொடர்வதே அதற்குக் காரணம். நல்ல வேலை, நல்ல சம்பளம் எனக் கூறும் கவர்ச்சிகரமான விளம்பரங்களின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட முடியாது என்றார் அவர்.
அவ்வாறு ஏமாற்றப்பட்டு, மியன்மாரில் மோசடி வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவோர் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து மலேசியாவின் தி ஸ்டார் செய்தித்தாள் செப்டம்பர் மாதம் வெளியிட்ட செய்தியை அவர் சுட்டினார். அன்றாடம் யுஎஸ் $50,000 வரை அவர்கள் மோசடிமூலம் ஈட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அடி, பட்டினி, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல தண்டனைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டின் இறுதியில் பிலிப்பீன்சின் ஒரு மோசடி வளாகத்திற்குச் சென்ற அனுபவத்தை விவரித்த அவர், மோசடி வேலைக்காகக் கடத்தப்படுபவர்களின் வாழ்க்கைச் சூழல் ‘மனிதாபிமானமற்றது’ என்றார்.
இன்டர்போல் பிலிப்பீன்சில் மேற்கொண்ட மிகப்பெரிய அளவிலான அதிரடி நடவடிக்கை காணொளி 2024 நவம்பர் 7ஆம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்டது. அதில், மோசடி வேலைக்காகக் கடத்தப்பட்டவர்களில் மோசமான வசிப்பிடம், வேலையிடச் சூழல்களைக் காணலாம்.
“அவர்கள் பாதிக்கப்பட்டவர்களா அல்லது மோசடிக்காரர்களா என்பது ஒரு மெல்லிய கோடுதான். அதுதான் அவர்கள் பிழைத்திருப்பதற்கான வழி. அவர்கள் அங்கு இருக்கிறார்கள், அவர்கள் உயிர்வாழ வேண்டும், எனவே அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள்,” என்றார் ஸ்டெஃபனி பரூத்.