வேலை வாய்ப்புகளைத் தக்கவைக்க ‘ஏஐ’ கைகொடுக்கும்: அதிபர் தர்மன்

2 mins read
78fc4cf6-d87f-4ff3-b8bc-86c050202d3f
ஏ‌ஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர் மாநாட்டில் பேசிய அதிபர் தர்மன் சண்முகரத்னம். - The Straits Times

அதிவேக தொழில்நுட்ப மேம்பாடுகளால் வேலையை இழந்த ஊழியர்கள் வேறு துறைகளில் புதிய, ஆக்கபூர்வமான வேலைகளைப் பெற செயற்கை நுண்ணறிவு கைகொடுக்கக்கூடும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

வேலை இழந்தோரின் திறன்களை வளர்க்க செயற்கை நுண்ணறிவுத் துறை மேம்படுவது உள்ளிட்ட அம்சங்களின் முக்கியத்துவத்தை திரு தர்மன் சுட்டினார்.

செவ்வாய்க்கிழமை (மே 27) ஐந்தாவது முறையாக நடைபெறும் ஏ‌ஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர் (Asia Tech x Singapore) மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் திரு தர்மன் பேசினார்.

“தொழில்நுட்ப மேம்பாடுகளால் ஒரு துறையில் வேலை இழந்தவர்களை எவ்வாறு மீண்டும் வேலையில் சேர்ப்பது... பர்கர் புரட்டச் செய்யவைப்பது மட்டுமல்ல (not just flipping burgers). அவர்களை மற்ற துறைகளில் வேலையில் சேர்க்கவேண்டும்,” என்றார் திரு தர்மன். ஆக்கத்திறனைப் பற்றி விரிவாகச் சிந்திக்குமாறு அவர் திரண்டிருந்தோரைக் கேட்டுக்கொண்டார்.

“இது, ஒட்டுமொத்த ஊழியரணிக்குமான ஆக்கத்திறனைச் சார்ந்தது. வேலையில் தொடர விரும்பும் அனைவருக்கும் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க நமது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,” என்று திரு தர்மன் சுட்டினார்.

ஃபுல்லர்ட்டன் பே ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் திரு தர்மன், ஆலைகள், வங்கிகள், தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனங்கள் (call centres) ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவால் ஆக்கத்திறன் அதிகரித்துள்ளது என்று கூறினார். அதேவேளை, அந்த மேம்பாட்டால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின்றன எனச் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று அம்சங்களுக்காக செயற்கை நுண்ணறிவு தொடர்பில் உலகளாவியக் கருத்துகளைப் பெறலாம் என்று அதிபர் தர்மன் சொன்னார். செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை முழுமையாகச் சாதகமாக்கிக்கொண்டு தீமைகளால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்வது அந்நடவடிக்கையின் இலக்கு.

மனித குலத்தின் ஆக்கத்திறன் அந்த மூன்று அம்சங்களில் ஒன்றாகும். சுகாதாரப் பராமரிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை இதர இரு அம்சங்கள் என்று திரு தர்மன் அரை மணிநேரம் நீடித்த தமது உரையில் எடுத்துச்சொன்னார். அரசியல் தலைவர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோரின் முன்னிலையில் அவர் பேசினார்.

குறிப்பாக, நோய்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு சுகாதாரப் பராமரிப்புத் துறை எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு உதவும், பருவநிலை மாற்றத்தைக் கையாள எரிசக்தியை மேலும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவும் வகைசெய்யும்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ‌ஏஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர் மாநாடு, செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை (மே 29) வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்