போய்சி: சிங்கப்பூர் ஆயுதப்படை தற்போது அதிக அளவில் சிறிய, நவீன ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்திவரும் வேளையிலும் பல ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்டுவரும் ஹெரோன் 1 வகை ஆளில்லா வானூர்திகளும் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் ஐடாஹோ மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஃபோர்ஜிங் சேபர் ராணுவப் பயிற்சியின்போது இந்த அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய ஆளில்லா வானூர்திகளால் மேற்கொள்ள முடியாத அதிக சிக்கலான நடவடிக்கைகளை ஹெரோன் 1 சாத்தியமாக்குகிறது என்பதை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை வலியுறுத்தியது.
எடுத்துக்காட்டாக, இடங்களை அடையாளம் கண்டு குறிவைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதைப் பொறுத்தவரை சிறிய ஆளில்லா வானூர்திகளைக் காட்டிலும் ஹெரோன் 1 அதிக நேரம் (24 மணிநேரத்துக்கு மேல்) செயல்படக்கூடியது என்பதை ஆகாயப்படை பொறியாளரான ராணுவ வல்லுநர் 1 (எம்இ1) மெய்கார்த்திக் சந்திர சேகரன், 23, குறிப்பிட்டார்.
“நிலத்தில் கூடுதல் பகுதிகளைச் சோதனையிட முடிவது, வானத்தில் அதிக நேரம் இயங்க முடிவது ஆகியவை ஹெரோன் 1ன் நன்மைகள்,” என்றார் முதன்முறையாக இதுபோன்ற ராணுவப் பயிற்சி ஒன்றில் பங்கேற்கும் முழுநேர தேசிய சேவையாளரான மெய்கார்த்திக். புதிய, சிறிய ஆளில்லா வானூர்திகளால் சில மணிநேரம் மட்டுமே இயங்க முடியும் என்றும் அவர் சுட்டினார்.
ஆளில்லா வானூர்திகள் இயக்கநிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது மெய்கார்த்திக்கின் பொறுப்பு.
ஹெரோன் 1, ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் முதன்முறையாக 2015ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. அப்போது மெய்கார்த்திக்குக்கு வயது 13.
“23 வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கையாள்வதை மிகுந்த கெளரவமாகப் பார்க்கிறேன்,” என்று அவர் பெருமைப்பட்டார்.
இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கிய ஃபோர்ஜிங் சேபர் பயிற்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும். இப்பயிற்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இதற்கு முன் இல்லாத அளவில் ஆக அதிகமான ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்கைடியோ எக்ஸ்10 (Skydio X10) வகை அதிநவீன ஆளில்லா வானூர்திகள் உட்பட மொத்தம் 24 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.