நம்பகத்தன்மைக்காக முழுமையான அடையாள அட்டை எண் பயன்பாடு

ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்துவது நம்பகமானதல்ல என அமைச்சர் விளக்கம்

நம்பகத்தன்மைக்காக முழுமையான அடையாள அட்டை எண் பயன்பாடு

2 mins read
fd382d88-cb37-4434-a733-df644c4a6d96
வரும் 2027 ஜனவரி 1 முதல் ஒருவரது அங்கீகாரமாக தேசிய அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தும் தனியார் அமைப்புகள், தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் ஆபத்து உள்ளது.  - கோப்புப் படம்: சாவ்பாவ்

தேசிய அடையாள அட்டை எண்களின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்துவது தனிநபர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்கு நம்பகமானவை அல்ல என்பதால் அரசாங்க நிறுவனங்கள் அடையாள அட்டை எண்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

எனினும், ஒருவரைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், அடையாள அட்டை எண்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுத்துறை, தனியார் துறை பரிவர்த்தனைகளில் குடிமக்களின் அடையாள அட்டை எண்களின் முறையான பயன்பாடு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என்பது குறித்து பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஷாரில் தாஹாவின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

சிலர் ஒரே பகுதி அடையாள அட்டை எண்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிலருக்கு பெயர், பகுதி அடையாள அட்டை எண்கள் இரண்டுமே ஒரே மாதிரி உள்ளன. எனவே, முழு எண்களையும் பயன்படுத்துவதே நம்பகமானது என்று அமைச்சர் லாவ் விளக்கினார்.

உரிமங்கள், வேலைவாய்ப்புக் கடிதங்கள் போன்ற அதிகாரபூர்வ ஆவணங்களில் அடையாள அட்டை எண்ணை முழுமையாக முகமைகள் பயன்படுத்துகின்றன.

பகுதி எண்களைப் பயன்படுத்துவது தொடர்பான தற்போதுள்ள வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு முன்பு அரசாங்கம் தனியார் துறையுடன் கலந்தாலோசிக்கும் என்று திருவாட்டி லாவ் கூறினார்.

கணக்கியல், நிறுவன ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் தரவுத் தளத்தில் உள்ள நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகளின் அடையாள அட்டை எண்கள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அதன் புதிய Bizfile இணைய வாசலில் தவறுதலாக வெளியிடப்பட்டதை அடுத்து அடையாள அட்டை எண்களை ரகசிய எண்களாகக் கொள்வதில் கொள்கை மாற்றம் ஏற்பட்டது.

அப்போது முதல், அரசு, தனியார் துறைகளில் அடையாள அட்டை எண்கள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2025 ஜூன் மாதம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மைக்காக அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்தன.

அதாவது, மக்கள் அடையாள அட்டை எண்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கடவுச்சொற்களாகப் பயன்படுத்தக்கூடாது. எளிதில் பெறக்கூடிய பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தரவுகளுடன் அவற்றை இணைத்தும் பயன்படுத்தக்கூடாது.

அத்தகைய நடைமுறைகளை நிறுத்த தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு, சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவதாக திருவாட்டி லாவ் கூறினார்.

வரும் 2027 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மை காரணங்களுக்காக அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தக்கூடாது. விதிமுறையை மீறும் தனியார் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் (பிடிபிஏ) கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

கடந்த 2025 ஜூன் முதல், சமூக ஊடகம், பாரம்பரிய ஊடகங்கள், சாலைக்காட்சிகள் போன்றவை மூலம் முறையான அடையாள அட்டை எண் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்