எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டைப் பயன்படுத்திய சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது ஆண், சிங்கப்பூர் சிறைச் சேவையின்கீழ் போதையர் மறுவாழ்வு இல்லத்தில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அவர் இரண்டு மாதகாலத்துக்குப் போதைப்பொருள் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், மூன்று முறை எட்டோமிடேட் குற்றங்களைப் புரிந்ததற்காகப் பிடிபட்டிருந்தார்.
எட்டோமிடேட் மற்றும் அதுபோல இருக்கும் போதை மருந்துகள், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட போதை மருந்துகளில் ‘சி’ பிரிவு மருந்தாக வகைப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு எட்டோமிடேட்டைத் தவறாகப் பயன்படுத்திய ஒருவர் போதையர் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
போதையர் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்படுவோருக்கு, அவர்கள் மறுபடியும் எட்டோமிடேட் சம்பந்தப்பட்ட குற்றங்களை புரிவதைத் தவிர்க்கும் நோக்கில் மறுவாழ்வுத் திட்டங்கள் வழங்கப்படும். மனநலத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தத் திட்டங்கள், குடும்பம் சார்ந்த திட்டங்கள், சமய ரீதியான மனநல ஆலோசனை போன்றவை அத்திட்டங்களில் அடங்கும்.
மறுவாழ்வு இல்லத்திலிருந்து விடுவிக்கப்படும் ஒருவர் அடிக்கடி போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்வார், சமூக அளவில் கண்காணிக்கப்படுவார். மறுவாழ்வு இல்லத்தில் இருக்கும் காலமும் அதன் பிறகு சமூக அளவில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பும் மொத்தம் 12 மாதங்கள் நீடிக்கும்.
மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும் 16 வயது ஆடவரை முதலில் கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் தேதி பிடித்ததாக உள்துறை அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் திங்கட்கிழமை (டிசம்பர் 8) கூறின. அப்போது அவரிடம் சாதாரண மின்சிகரெட் இருந்தது.
பிறகு அக்டோபர் இரண்டாம் தேதி அவரின் வீட்டில் மின்சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் கலந்திருந்தது சோதனைகளில் தெரிய வந்தது. இதுவே அவரின் முதல், எட்டோமிடேட் தொடர்பான குற்றமாகும்.
பிறகு எட்டோமிடேட் குற்றத்தை மீண்டும் புரிந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். எட்டோமிடேட்டை வைத்திருந்ததற்காகவும் அதை உட்கொண்டதற்காகவும் தனது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு அக்டோபர் 23ஆம் தேதியன்று தனியார் வாடகை வாகனத்தில் தெளிவின்றிப் பேசியவாறு இயல்புக்கு மாறாக நடந்துகொண்டபோது மீண்டும் கைது செய்யப்பட்டார். இது, ஆடவரின் மூன்றாவது எட்டோமிடேட் குற்றமாகும்.

