வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வாழும் 950,000க்கும் அதிகமான சிங்கப்பூர் குடும்பங்கள் பயனீட்டு, சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க ஏதுவாக அவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.
தகுதிபெறும் குடும்பங்கள், தங்களின் பயனீட்டுக் கட்டணங்களில் 285 வெள்ளி வரையிலான யு-சேவ் தள்ளுபடி பெறவுள்ளன. சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் ஒரு மாதம் வரைக்குமான தள்ளுபடியையும் அவை பெறும். தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பமும் எந்த வகை வீவக வீட்டில் வசிக்கிறது என்பதைப் பொறுத்து இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நாலறை வீவக வீடுகளில் வசிப்போர் 225 வெள்ளி பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடியும் அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியும் பெறுவர். அதேவேளை, ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு 285 வெள்ளிக்கான பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடியும் அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
தகுதிபெறும் குடும்பங்களுக்கு, மின்சாரக் கட்டமைப்பை நிர்வகிக்கும் அமைப்பான எஸ்பி சர்விசஸ் (SP Services), சம்பந்தப்பட்ட நகர மன்றங்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தகுதிபெறும் குடும்பங்களின் கணக்குகளில் வரவு சேர்க்கப்படும்.
ஒட்டுமொத்தமாக தகுதிபெறும் குடும்பங்கள் வழக்கமாகப் பெறும் யு-சேவ் தள்ளுபடிகளில் இரண்டரை மடங்கைப் பெறும். 950 வெள்ளி வரையிலான தள்ளுபடிகளை அக்குடும்பங்கள் பெறும்.
2024ஆம் நிதியாண்டின் கடைசி இரு கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட பிறகு இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படும். ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போர் சராசரியாக சுமார் எட்டு மாதங்களுக்கான பயனீட்டுக் கட்டணங்களில் தள்ளுபடி பெறுவர். மூவறை, நாலறை வீடுகளில் வசிப்போருக்கு சுமார் நான்கு மாதங்களுக்கான பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.