வரும் ஏப்ரல் மாதம் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான சிங்கப்பூர் குடும்பங்களுக்குப் பயனீட்டு, மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.
தகுதிபெறும் குடும்பங்கள் பயனீட்டுக் கட்டணங்களில் 190 வெள்ளி வரையிலான யு-சேவ் தள்ளுபடியையும் ஒரு மாதம் வரைக்குமான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெறும் என்று நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் வீவக வீட்டு வகையைப் பொறுத்து தள்ளுபடிகள் வழங்கப்படும்.
மொத்தத்தில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் நிதியாண்டில் தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பமும் 760 வெள்ளி வரை யு-சேவ் தள்ளுபடிகளையும் ஒரு மாத வரைக்குமான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளையும் பெறும். தள்ளுபடிகள் தகுதிபெறும் குடும்பங்களின் ‘எஸ்பி சர்விசஸ்’, நகர மன்றக் கணக்குகளில் தானாகவே சேர்க்கப்படும்.
இந்தத் தள்ளுபடிகள் ஆண்டுதோறும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் இத்தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.