தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியோர் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியோர் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: சாவ் பாவ்

22 Nov 2026 - 12:42 pm

1 mins read

சிங்கப்பூரின் நோய்த் தடுப்புக்கான சுகாதார முயற்சிகளின் ஓர் அங்கமாக, தடுப்பூசிக்கான மானியங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, அதிகமான முதியோர் தடுப்பூசிகளை அண்மை ஆண்டுகளில் போட்டுக்கொண்டுள்ளனர்.

தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பின் (சிடிஏ) தரவுகளின்படி, 65 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது, நிரந்தரவாசிகளில் குறைந்தபட்சம் சளிக்காய்ச்சலுக்கான (இன்ஃபுளுவென்சா) தடுப்பூசியை ஒருமுறையேனும் போட்டுக்கொண்டோரின் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்குக்குமேல் ஏற்றமடைந்துள்ளது.

2021ல் 20.4 விழுக்காட்டிலிருந்த அவ்விகிதம் 2025ல் 49.5 விழுக்காடானது.

அதேவேளை, நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சிக்கான (நியுமோகாக்கல்) தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதம் 2021ல் 31.6 விழுக்காட்டிலிருந்து 2025ல் 67.8 விழுக்காடு எனக் கணிசமாக உயர்ந்துள்ளது.

பெரியோர்க்கான தேசியத் தடுப்பூசி அட்டவணையின்படி, குறிப்பிட்ட அளவிலான முதியோர் அக்கி அம்மைக்கு எதிரான தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

அந்நோய் அந்த அட்டவணையில் 2025 செப்டம்பரில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதற்கான மானியங்கள் வழங்கப்பட்டதிலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் வரையில் 199,000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. சிடிஏ அமைப்பின் கொள்கை வகுப்பு, திட்டங்களுக்கான குழுவின் இயக்குநர் ஷேரன் ஆங் இதைத் தெரிவித்தார்.

அட்டவணையில் இணைக்கப்படுவதற்கு முன்பாக அக்கி அம்மைக்கான தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை அறியப்படாத நிலையில், அது குறைவாகத்தான் இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“தேசியத் தடுப்பூசி அட்டவணையின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டு, தடுக்கக்கூடிய தொற்றுநோய்கள், கடுமையான உடல்நலப் பாதிப்புகள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று திருவாட்டி ஆங் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்