அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 11 ஆண்டுகளில் காணப்படாத உச்சம்

2 mins read
84451eee-4074-4fdf-bd18-f24d20a8beb1
அமெரிக்க டாலருக்கு நிகராக, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத உச்சத்தைத் தொட்டது சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு. - கோப்புப் படம்: சாவ்பாவ்

அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்படாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

டாலருக்கு நிகராக, கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இல்லாத உச்சத்தை சிங்கப்பூர் வெள்ளி எட்டியுள்ளது.

ஒரு டாலருக்கு நிகராக வெள்ளியின் மதிப்பு 0.4 விழுக்காடு அதிகரித்து 1.2678ஆகப் பதிவானது.

ஜப்பானிய நாணயச் செலாவணியில் அமெரிக்கத் தலையீடு இருக்கக்கூடும் என்ற வதந்தி தொடரும் வேளையில் இந்நிலை உருவாகியுள்ளது.

முக்கிய நாணயங்களை ஒன்றுசேர்க்கும்போது அவற்றுக்கு நிகரான டாலரின் மதிப்பு 0.4 விழுக்காடு சரிந்தது.

சென்ற வாரம் டாலரின் மதிப்பு 1.6 விழுக்காடு குறைந்ததையடுத்து அதன் சரிவு தொடர்ந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு டாலரின் மதிப்பு இவ்வளவு குறைவாக இருந்ததில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நியூயார்க் ரிசர்வ் வங்கி நாணய மதிப்பைச் சோதனையிட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானிய யென்னுக்கு நிகரான டாலரின் மதிப்பைக் குறைக்க அமெரிக்கா உதவக்கூடும் என்ற வதந்தி எழுந்தது. டாலருக்கு நிகரான யென்னின் மதிப்பு 1.2 விழுக்காடு வரை கூடியது.

டாலரின் மதிப்பு வலுவிழந்தது இதர சில ஆசிய நாணயங்களுக்கும் சாதகமாக அமைந்தது.

டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத அளவு உயர்ந்தது. அதேபோல் தென்கொரியாவின் வோன் நாணயமும் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

வரும் வியாழக்கிழமை (ஜனவரி 29) சிங்கப்பூர் நாணய ஆணையம் சந்திப்பு நடத்தவுள்ளது. மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து நிலையாக இருக்கும் வேளையில் ஆணையம், நாணயச் செலாவணி அம்சங்களில் மாற்றம் செய்யாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் சட்டங்கள் ஓரளவு கணிக்க முடியும் நிலையில் இருப்பது, AAA-பத்தி முதலீடுகள் போன்ற காரணங்களுக்காக அண்மை ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் பலர் சிங்கப்பூருக்கு ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்