எட்டு வாகனங்கள்மீது மோதிய வேன்; ஓட்டுநரிடம் விசாரணை

1 mins read
567ab62e-b249-460f-ada4-669fb4d4ddbe
நிப்பான் பெயின்ட் என்ற வாசகங்களைத் தாங்கியிருந்த வேன் ராஃபிள்ஸ் அவென்யூவில் ஒரு போக்குவரத்துக் கம்பத்தின்மீது மோதி நின்றது. - படங்கள்: எஸ்ஜிஆர்வி, எஸ்ஜிஆர்வி ஃபிரன்ட் மேன்/ஃபேஸ்புக்

நான்கு கார்கள், இரண்டு வேன்கள், இரண்டு லாரிகள் என எட்டு வாகனங்கள்மீது வேன் ஒன்று மோதியதாகக் கூறப்படும் நிலையில், அதன் 65 வயது ஓட்டுநரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.

டௌனர் ரோடு, சிராங்கூன் ரோடு, லெவண்டர் ஸ்திரீட் ஆகிய பகுதிகளில் பல வாகனங்கள்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தொடர்பில் டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 1.35 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

பின்னர் அந்த வேன் ஸ்டாம்ஃபர்ட் அவென்யூவை நோக்கிச் செல்லும் ராஃபிள்ஸ் அவென்யூவில் சறுக்கியதாக நம்பப்படுகிறது.

சுயநினைவுடன் கூடிய நிலையில் அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த வேன் தொடர்புடைய விபத்து குறித்த காணொளிகளும் படங்களும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டன.

அத்தகைய காணொளி ஒன்றில், அந்த வேன் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் சென்று, லெவண்டர் ஸ்திரீட்டில் நின்றிருந்த ஒரு காரின்மீது மோதியது தெரிந்தது.

ராஃபிள்ஸ் அவென்யூவில் உள்ள ஒரு போக்குவரத்துக் கம்பத்தின்மீது அந்த ஆரஞ்சு நிற வேன் மோதி நின்றதைப் படங்கள் காட்டின. அந்த வேனின் கண்ணாடியும் நொறுங்கியிருந்தது.

கடந்த 2024 முற்பாதியைக் காட்டிலும் 2025 முற்பாதியில் சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காயமுற்றனர் என்பதை 2025 ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட போக்குவரத்துக் காவல்துறை அரையாண்டு அறிக்கை காட்டியது.

2025 முற்பாதியில் காயம் விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 3,740ஆகப் பதிவானது. முந்திய 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 3,437ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்